லண்டனில் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்டம் தெற்கின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்காக நடத்தப்பட்டது என தாங்கள் நம்புவதாக பிவத்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று (26.11.2025) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது, தெற்கை பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுவது போல் எளிதானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்தவுக்கு எதிரான போராட்டம்
மேலும் கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, “ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியை மாத்திரம் பயன்படுத்தியதையே காணக்கூடியதாக இருந்தது.
எவருமே, தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்தோ அல்லது கோரிக்கைகளை நினைவுகூரியோ எதிரப்பில் ஈடுபடவில்லை.
அதேபோல், ரில்வின் சில்வா வாகனத்திலிருந்து இறங்கி நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு நடந்து சென்ற போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் அதனை தடுக்கவும் இல்லை.
2012 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்தவுக்கு எதிராக லண்டனில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் போராட்டத்தோடு இதனை நாம் ஒப்பிட வேண்டும்.
அந்த போராட்டத்தின் போது மகிந்த ராஜபக்ச மீது மிகவும் கோபத்துடனேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகிந்த ராஜபக்சவின் மரணமே அவர்களின் ஒரே பிரார்தனையாகவும் இருந்தது.
அங்கு ஒரு 10 நிமிடம் தரித்திருந்தால் கூட மகிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக அப்போதைய பாதுகாப்பு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.
எனினும், அண்மையில் ரில்வின் சில்வாவுக்கு எதிரான போராட்டம் மிகவும் சுமூகமான முறையிலேயே நடைபெற்றிருந்தது. எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இருக்கவில்லை.
எவ்வாறாயினும், வடக்கின் பயங்கரவாதிகள் மற்றும் தெற்கின் பயங்கரவாதிகள் இடையே நெருங்கிய உறவு ஒன்று உள்ளது.
அநுரவின் திட்டம்
கடந்த காலங்களில் இனவாத்தை கிளப்பிய தேசிய மக்கள் சக்தியின் திட்டங்களால் தெற்கின் வாக்குகள் முறிந்தன.
இராணுவப் போராளிகளை, இராணுவ வீரர்கள் என அடையாளப்படுத்தினர்.
சமாதானத்திற்காகவே விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தியதாக தெரிவித்தனர்.
வடக்கில் இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டன.
வடக்கின் விகாரைகளை நீக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கியது.
கிழக்கின் விகாரைகளை அழிக்க திட்டமிடப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகளால் முறிந்த தெற்கின் வாக்குகளைப் பெறுவதற்காகவே லண்டனில் போராட்டம் இடம்பெற்றது.
அதாவது, தெற்கின் பயங்கராதிகளுக்கு வடக்கின் பயங்கரவாதிகள் வழங்கிய ஆதரவு தான் இந்த லண்டன் போரைாட்டம் இடம்பெற்றதா என்றொரு சாதாரண சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கிய மறைமுக வாக்குறுதிகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.
