ரஷ்யாவின்(russia) கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த 100 கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன்(ukraine) இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தப் பிராந்தியத்தில் கடந்த 3 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையில் 594 ரஷ்ய வீரா்களைக் கைது செய்துள்ளதாகவும் இராணுவம் கூறியுள்ளது.
இது குறித்து உக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஒலெக்ஸாண்டா் சிா்ஸ்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
100 கிராமங்கள் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள்
கூா்ஸ்க் பிராந்தியத்தின் 100 கிராமங்கள் தற்போது உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது அந்தப் பிராந்தியத்தின் 1,294 சதுர கி.மீ. நிலப்பரப்பு உக்ரைன் வசம் உள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கையின்போது 594 ரஷ்ய வீரா்கள் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.
முதன்முறை வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள்
கூா்ஸ்க் பகுதி போரில் கைது செய்யப்பட்ட ரஷ்ய இராணுவத்தினா் குறித்த புள்ளிவிவரங்கள் அதிகாரபூா்வமாக வெளியிடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக 81 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மேலும் 5 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா்.