Home இலங்கை சமூகம் போர்க்காலம் போலவே ஐ.நா தமிழ் மக்களை கைவிட்டுள்ளது! சி.அ.யோதிலிங்கம்

போர்க்காலம் போலவே ஐ.நா தமிழ் மக்களை கைவிட்டுள்ளது! சி.அ.யோதிலிங்கம்

0

போர்க்காலம் போலவே ஐ.நா தமிழ் மக்களை கைவிட்டுள்ளது என அரசியல் ஆய்வாளரும்,
சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான
சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல்
ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்
தெரிவித்ததாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் கடந்த 08 ஆம் திகதி
ஆரம்பமாகியுள்ளது.

அரசியல் தீர்வு

மனித உரிமை ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கை, இலங்கை
வெளிநாட்டு அமைச்சரின் அறிக்கை, அனுசரணை நாடுகளின் தீர்மான முன்மொழிவு,
உறுப்பு நாடுகளின் கருத்துக்கள் என்பன வெளிவந்துள்ளன. அனைத்து அறிக்கைகள்,
கருத்துக்களும் பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, நிலைமாறு காலநீதியை
வலியுறுத்தல் என்பவை சுற்றியே அமைந்துள்ளன.

இந்தியா பொறுப்புக்கூறல் நிலைமாறு காலநீதி என்பவை பற்றி அதிகம் பேசவில்லை.
எப்போதும் போல 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மாகாண சபை
தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என்பனவற்றையே அதிகம் வலியுறுத்தி இருந்தது.

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இந்தியாவும் பதில் சொல்லவேண்டும் என்பதால் அதனை
தவிர்த்து இருக்கலாம்.

நிலைமாறு காலநீதி தொடர்பாகவும், அக்கறையற்ற தன்மையையே
காட்டியது. அரசியல் தீர்வு விவகாரத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு
வேண்டும் என மட்டும் கூறியிருந்தது. வழக்கம்போல இலங்கையின் ஆள்புல மேன்மை,
இறைமை என்பவற்றை மதித்தல், தமிழ் மக்களின் சமத்துவம், உரிமை பேணப்படல்
இந்தியாவின் நிலைப்பாடு என வாய்ப்பாடாக ஒப்புவித்தது.

தமிழ் மக்கள் குறித்து அரசியல் நிலைப்பாட்டை கூறியமை. இந்திய கொள்கை
நிலைப்பாட்டின் அண்மைக்கால வளர்ச்சி எனலாம். இங்கே அனைவரினதும் கவனத்தைப்
பெற்ற விடயம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் அறிக்கை
தான்.

அனுசரணை நாடுகளின் தீர்மானம் முன்மொழிவுகள் கூட அவரது அறிக்கையை
மையப்படுத்தியே அமைந்தன எனலாம்.

உறுப்பு நாடுகளின் கருத்துக்களும் அறிக்கையை
ஒட்டியே அமைந்திருந்தன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கையில் உள்ள முதலாவது முக்கிய விடயம்
பொறுப்புக்கூறல் பற்றி அவர் முன்வைத்த கருத்துக்கள் தான். தமிழ் மக்களின்
நீண்ட கால கோரிக்கையும் அதையொட்டியே அமைந்திருந்தது.

நீதிப்பொறிமுறை 

கருத்துருவாக்கிகள் எதிர்பார்த்தது போல பொறுப்புக் கூறலுக்கு உள்ளகப்
பொறிமுறையையே அவர் சிபாரிசு செய்திருந்தார். இதற்காக சுயாதீன விசேட
சட்டவாதியின் பங்கேற்புடன் கூடிய பிரத்தியேக நீதிப்பொறிமுறை உருவாக்க வேண்டும்
எனக் கூறியிருந்தார். சாதாரண தமிழ் மக்களைப் பொறுத்தவரை மீளவும் உள்ளகப்
பொறிமுறையை சிபாரிசு செய்தமை ஏமாற்றம் தான்.

சர்வதேச பொறிமுறையே தமிழ்
மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் சர்வதேச பொறிமுறைக்கான சர்வதேச
அரசியல் சூழல் இன்னமும் உருவாகாததினால் கருத்துருவாக்கிகளுக்கு இந்த சிபாரிசு
பெரிய ஏமாற்றத்தை கொடுக்கவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை சுயாதீனமான கட்டமைப்பல்ல. சர்வதேச அரசியலுக்கு
கீழ்ப்படிந்த கட்டமைப்பு தான்.

வல்லரசுகளின் பூகோள, புவிசார் அரசியல்
இன்னமும் சர்வதேச பொறிமுறை என்னும் கட்டத்திற்கு செல்லவில்லை. இலங்கையில்
தங்களின் புவிசார், பூகோள அரசியல் நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற
அச்சமே இதற்கு காரணமாகும்.

இதற்காக ஒரு போதும் இது சாத்தியப்படாது என கூறிவிட முடியாது. அதற்கான காலம்
கனியும்வரை தமிழ் மக்கள் ஐ.நாவின் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.

இலங்கை அரசின் இயலாமையும் பூகோள, புவிசார் அரசியல் மாற்றங்களும் அதற்கான
வாய்ப்புகளைத் தரும்.
உள்ளக நீதிப்பொறிமுறை ஒருபோதும் வெற்றியை தரப்போவதில்லை. இதற்கு பல காரணங்கள்
உண்டு. அதில் முதலாவது இன அழிப்பு, போர் குற்றம் என்பவை இலங்கை அரசாங்கத்தின்
தீர்மானங்கள் அல்ல. இலங்கை அரசின் தீர்மானம். அனைத்து குற்றங்களும் இலங்கை
அரசின் தீர்மானப் படியே நிறைவேற்றப்பட்டன.

எனவே எந்த அரசாங்கம் பதவிக்கு
வந்தாலும் முறையான நீதியான விசாரணையை நடத்தப்போவதில்லை. இலங்கை அரசின்
உருவாக்கம் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாத கருத்தியலின் அடிப்படையிலேயே
கட்டியெழுப்பப்பட்டது.

முறையான விசாரணையை பெருந்தேசிய வாதக் கருத்தியல் ஒருபோதும் அனுமதிக்க
போவதில்லை. பெருந்தேசியவாதத்தால் கட்டுண்ட சிங்கள மக்களும் அனுமதியளிக்கப்
போவதில்லை.

கிருசாந்தி கொலை வழக்கு

சுயாதீன விசாரணைப் பொறிமுறை என இதுவரை பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
அவற்றின் பலவீனமான சிபாரிசுகளைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. தவிர

உள்ளக விசாரணை இயற்கை நீதிக்கும் முரணானது. குற்றம் செய்தவனே நீதிபதியாகி விட
முடியாது.

கிருசாந்தி கொலை வழக்கு போன்ற சில விவகாரங்களில் விசாரணை நடாத்தப்பட்டு
தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது உண்மைதான். அது தவிர்க்க முடியாத உண்மைகளைக்
கொண்டிருந்ததால் விசாரணை நடைபெற்று தண்டனையும் வழங்கப்பட்டது.

எனினும் அங்கு
சுறாக்கள் பிடிபடவில்லை சூடைகள் தான் அகப்பட்டன.
இரண்டாவது சிங்கள தேசத்தின் அரசியல் கலாச்சாரம் முறையான விசாரணைக்கு ஏற்றதாக
இல்லை. சிங்கள தேசத்தின் அரசியல் கலாச்சாரம் என்பது சிங்கள பௌத்த மேலாதிக்க
கலாச்சாரம் தான். இலங்கைத் தீவுக்குரிய பன்மைத்துவக் கலாச்சாரம் அங்கு
கட்டியெழுப்பப்படவில்லை. இடதுசாரிக் கட்சிகள் ஆரம்ப காலங்களில் சில
முயற்சிகளைச் செய்த போதும் பின்னர் அவையும் வாக்கு வேட்டைக்காக சிங்கள பௌத்த
தேசியவாதத்தில் கரைந்து போயின.

இந்த அரசியல் கலாச்சாரம் வரலாறு, ஐதீகம்,
அரசியல் என்பவற்றினால் கட்டியெழுப்பப்பட்டது. இதனை மாற்றி சகல இனங்களையும்
சமத்துவமாக பேணும் வகையிலான பன்மைத்துவ அரசியல் கலாச்சாரத்தை
கட்டியெழுப்புவதற்கு சிங்கள தேசத்தில் நேர்மையான உழைப்பு தேவைப்படுகின்றது.
துரதிஸ்டவசமாக அங்கு அதற்கான தயார் நிலை இல்லை. இன்று இலங்கை தீவில் இலங்கையர்
என்ற அடையாளம் இல்லை.

மாறாக சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்
என்ற அடையாளமேயுள்ளது. தமிழ் மக்கள் இலங்கையர் என்ற அடையாளத்தை பேணுவதற்கு
தயார். அதற்கு முதலில் தமிழர்கள் என்ற அடையாளம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மூன்றாவது இராணுவத்தின் மேலாதிக்கமாகும். இராணுவம் இன்று அரசியல் சக்தியாகவும்
உள்ளது. இராணுவத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசாங்கத்திற்கு இல்லை. சிங்கள ,
பௌத்த தேசியவாத கருத்தியல் பக்கபலமாக இருப்பதோடு அதனால் வசீகரிக்கப்பட்ட
சிங்கள மக்களும் பக்கபலமாக உள்ளனர்.

சிங்கள தேசத்தின் பிரச்சினை

இராணுவ அதிகாரம், சிங்கள பௌத்த
கருத்தியல், சிங்கள மக்களின் ஆதரவு மூன்றும் சேர்ந்து இராணுவத்தை ஒரு பலமான
அரசியல் சக்தியாக்கியுள்ளது தவிர இன அழிப்பு என்ற அரசின் நோக்கத்தை
நிறைவேற்றும் பணியிலேயே இராணுவத்தினர் ஈடுபட்டனர். அரசின் நோக்கத்தை
நிறைவேற்றியவர்களை அரசாங்கத்தினால் குற்றவாளியாக்க முடியாது.
சிங்கள தேசத்தில் பல விடயங்களில் இராணுவத்தினர் குற்றவாளியாக்கப்பட்டு கைது
செய்யப்பட்டுள்ளனர் என்பது உண்மைதான்.

அது சிங்கள தேசத்தின் பிரச்சினை
தொடர்பாகவே நிகழ்ந்துள்ளது. இது விடயத்தில் சிங்கள பௌத்த கருத்தியலும் சிங்கள
மக்களும் இராணுவத்திற்கு துணையாக இல்லை. தவிர இலங்கை அரசின் நோக்கத்தை
நிறைவேற்றும் வகையில் அந்த குற்றங்கள் இழைக்கப்படவில்லை. மாறாக இலங்கை அரசினை
பலவீனப்படுத்தும் வகையிலேயே அந்த குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசைப்
பலவீனப்படுத்தும் எந்த விவகாரத்தை அரசும் ஏற்றுக்கொள்ளாது.

நான்காவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் விருப்மின்மையாகும்.
தேசிய மக்கள் சக்தி என்னதான் முகமூடிகள் அணிந்தாலும் அது இனவாதக் கட்சியான
ஜே.வி.பி யின் இன்னோர் வடிவம் தான். ஏனைய சிங்களக் கட்சிகள் கை வைக்காத தமிழ்
மக்களின் உணர்வு பூர்வமான விடயங்களில் ஜே.வி.பி கையை வைத்தது. தமிழ் மக்களின்
இருப்பையே சிதைத்தது. வடக்கு – கிழக்கு பிரிப்பு, சுனாமி பொதுக் கட்டமைப்பு
நீக்கம் என்பன இதற்கு சிறந்த உதாரணங்கள்.

தேசிய மக்கள் சக்தி வாக்கு வங்கிக்கு
சிங்கள மக்களையே நம்பியிருக்கின்றது. இதனால் சிங்கள மக்களின் விருப்பத்திற்கு
எதிராக எதையும் செய்யும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இல்லை.
ஜே.வி.பி தற்போது மாற்றமடைந்துள்ளது என தமிழர்கள் சிலர் கூட கூற
பார்க்கின்றனர். அந்த மாற்றம் உண்மையாக இருந்தால் தமிழ் மக்கள் தொடர்பாக
நல்லெண்ணத்தை காட்டியிருக்க வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்க
வேண்டும் ஆக்கிரமிப்புகளை நிறுத்தியிருக்க வேண்டும்.

பறித்த காணிகளை மீள
வழங்கியிருக்க வேண்டும். பதவிக்கு வந்த ஒரு வருட காலத்தில் எதுவுமே
நடைபெறவில்லை. ஒரு அங்குலம் காணி கூட விடுவிக்கப்படவில்லை. பலாலி வீதி மட்டும்
திறக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் இரவு 7 மணி வரை மட்டும் தான். அந்த
வீதியால் மக்கள் நடந்து செல்ல முடியாது. நிலங்களில் இராணுவத்தினர் பண்ணைகளை
அமைத்துள்ளனர். ஆனால் அங்கு குடியிருந்த மக்கள் இடைத்தங்கல் முகாம்களில்
அல்லற்படுகின்றனர்.

இராணுவத்திற்கு எதிராக விசாரணை

ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா “நாங்கள் போர்க் குற்றங்களை
இழைக்கவில்லை அதனால் விசாரணைகளை முன்னெடுப்பதில் எமக்கு தடை ஏதும் இருக்காது”
என யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியிருக்கின்றார். சிங்கள தேசத்தின் கூட்டு
விருப்பங்களுக்கு எதிராகவும் செயல்படத் தயாரா? என்பதையும் அவர் கூற வேண்டும்.

அவரது கருத்து உண்மையானால் சிங்கள தேசத்தின் பேரினவாத அரசியல் கலாச்சாரத்தை
மாற்றும் செயல் திட்டங்களை அவர்கள் முன்னெடுக்கின்றார்களா? தமிழ் மக்களின்
இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும்படி சிங்கள மக்களை கேட்க
அவர்கள் தயாராக இருக்கின்றார்களா? என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.

சிங்கள
– பௌத்த கருத்தியல் பலத்தோடும், சிங்கள மக்களின் கூட்டு ஆதரவோடும் செயற்படும்
இராணுவத்திற்கு எதிராக முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கு அவர்கள் ஒருபோதும்
துணிய மாட்டார்கள். இங்கு முறையான விசாரணை நடந்தால் இராணுவத்தினர் மட்டுமல்ல
அவர்களுக்கு கட்டளையிட்ட அரசியல் தலைவர்களும் மாட்டுப்பட வேண்டியிருக்கும்.

அதற்கெல்லாம் அரசியல் துணிவும், அரசியல் விருப்பமும் தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்திற்கு இருக்கின்றது எனக் கூற முடியாது.
ஐந்தாவது இலங்கையின் நீதித்துறையும் பேரின மயமாக்கப்பட்டுள்ளது. பல
வழக்குகளில் நீதித்துறை தமிழ் மக்களுக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை.
கிளிவெட்டி குமாரபுரம் படுகொலை, பண்டாரவளை பிந்தனுவெவ படுகொலை என்பவற்றில்
குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

எனவே நீதித்துறை நேர்மையாக நடக்கும்
என்று எதிர்பார்க்க முடியாது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் உள்ளகப்பொறிமுறையை சிபார்சு செய்தாலும் உள்ளகப்
பொறிமுறையின் கட்டமைப்பு தொடர்பாக எதுவும் கூறவில்லை. மாறாக கோட்பாட்டு
அடிப்படையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பங்கேற்புடன் விசாரணை செயன்முறை
இடம்பெற வேண்டும் என மட்டும் கூறியிருக்கிள்றார். சர்வதேச விழுமியங்களுக்கு
அமைவாக இடம்பெற வேண்டும் எனக் கூறிய அவர் அந்த சர்வதேச விழுமியங்கள் என்ன
என்பது பற்றி தெளிவாக எதுவும் கூறவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் உள்ளகப் பொறிமுறையை சிபார்சு செய்தாலும்
சர்வதேச மட்டத்தில் சர்வதேசப் பொறிமுறையின் கூறுகள் பின்பற்றப்படுவதற்கான
சிபார்சுகளை முன்வைக்கவும் தவறவில்லை. சாட்சியங்களை சேகரிப்பதற்கும்,
அச்சாட்சியங்களை உறுப்பு நாடுகள் பயன்படுத்த சிபாரிசு செய்தமையும் தான் அந்தக்
கூறுகள். சுமார் 105000 சாட்சியங்களை ஐ.நா மனி;த உரிமைகள் பேரவை
சேகரித்துள்ளது.

இதைவிட அமெரிக்காவிடம் இதைவிட மேலதிகமான சேகரிப்புகள் உள்ளன.
அவற்றையும் உறுப்பு நாடுகள் பயன்படுத்தி தங்களது நீதித்துறையினூடாக நடவடிக்கை
எடுப்பார்களாக இருந்தால் தமிழ் மக்கள் கொஞ்சமாவது ஆறுதல் கொள்ளும் நிலை
ஏற்படும்.

அரசியல் தீர்வு தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் பெரிதாக எதுவும் கூறவில்லை.
நல்லிணக்கத்தின் அவசியம் பற்றியே ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்
கூறல் நடைபெறாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பதை ஆணையாளர் ஆணித்தரமாகக்
கூறியிருக்கின்றார்.

அரசியல் தீர்வு பற்றி அதிகம் கதைத்தது இந்தியா தான். அதுவும் 13 வது
திருத்தத்திற்கு மேல் செல்லவில்லை. ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின்
கருத்துக்களுக்கு ஒத்தூதியமை தவிர புதிதாக எதையும் கூறவில்லை.
நிலைமாறு கால நீதி விவகாரம் பற்றித் தான் ஆணையாளர் அதிகம் பேசியிருக்கின்றார்.

அந்த வகையில் ஒடுக்கு முறைகளை நிறுத்துதல் தனியார் காணிகளை விடுவித்தல்
தண்டனைகளிருந்து தப்பிக்கும் போக்கினை முடிவுக்கு கொண்டு வரல், மீள நிகழாமையை
உறுதிப்படுத்தல், இராணுவ மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வரல், பயங்கரவாதத் தடைச்
சட்டத்தை நீக்குதல், நீக்கும் வரை அதன் பயன்பாட்டை நிறுத்துதல், என்பன பற்றி
அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை செயற்படுத்துவதற்கான கால வரையறை
பற்றி எதுவும் கூறவில்லை. வெறும் வேண்டுகோள்களாகவே அவைகள் இருந்தன.
மொத்தத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்
நிலைப்பாட்டிற்கு இடையே இடைவெளி அதிகமாக உள்ளது எனலாம். இது போர்க்காலம் போலவே
ஐ.நா தமிழ் மக்களை கைவிட்டுள்ளது என்ற நிலையை தோற்றுவிக்கலாம். 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Erimalai அவரால் எழுதப்பட்டு,
14 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

NO COMMENTS

Exit mobile version