இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்தல், நவ்ரு குடியரசில் உள்ள கடல் கடந்த தடுப்பு மையங்களுக்கு திருப்பி அனுப்புதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றிற்கு அவுஸ்திரேலியா பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது.
நவ்ருவில் உள்ள பிராந்திய செயலாக்க மையத்தில் நீண்டகாலமாகவும் தன்னிச்சையாகவும் தடுத்து வைக்கப்பட்ட ஏதிலிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகள் குறித்த தனது முடிவுகளை, ஐக்கிய நாடுகளின் குழு இன்று வெளியிட்டுள்ளது.
முன்னதாக அவுஸ்திரேலியா 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நவ்ருவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வலுக்கட்டாயமான நாடுகடத்தல்
இதன் மூலம் அவுஸ்திரேலியா ஏதிலிகளையும், புகலிட கோரிக்கையாளர்களையும், வலுக்கட்டாயமாக பசிபிக் தீவு நாடான நவ்ருக்கு அனுப்பி வருகிறது.
இந்தநிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும்போது, ஒரு அரசாங்கம், அதன் மனித உரிமைகள் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் குழு உறுப்பினர் மஹ்ஜூப் எல் ஹைபா கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் முறைப்பாட்டில், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மியான்மரைச் சேர்ந்த 24 ஆதரவற்ற சிறார்களை அவுஸ்திரேலியா கடலில் தடுத்து நிறுத்தியது.
அவர்கள் முதன் முதலில் 2013 மற்றும் 2014க்கு இடையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள அவுஸ்திரேலிய பிரதேசமான கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு வரப்பட்டு 2 முதல் 12 மாதங்கள் வரை கட்டாய குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
தடுத்து வைப்பு
பின்னர் அவர்கள் 2014இல் நவ்ருவுக்கு மாற்றப்பட்டு, போதுமான நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், அதிக வெப்பநிலை மற்றும் போதுமான சுகாதாரப் பராமரிப்பு இல்லாத நிலையில், நெரிசலான மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இதன் காரணமாக தடுத்து வைக்கப்பட்ட சிறார்களில் கிட்டத்தட்ட அனைவரும் சுய-தீங்கு, மனச்சோர்வு, சிறுநீரக பிரச்சினைகள், தூக்கமின்மை, தலைவலி, நினைவாற்றல் பிரச்சினைகள் மற்றும் எடை இழப்பு உள்ளிட்ட உடல் மற்றும் மன நல்வாழ்வில் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறார்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் 2024 செப்டெம்பரில் ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் நவ்ருவில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இரண்டாவது முறைப்பாட்டின்படி, ஈரானிய புகலிடம் கோரும் ஒருவர் 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில், செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் தனது கணவர் மற்றும் சிலருடன் கிறிஸ்மஸ் தீவுக்கு படகில் சென்றார்.
இந்தநிலையில் அவர், ஏழு மாதங்களுக்குப் பிறகு, அவர் நவ்ருவுக்கு மாற்றப்பட்டு பிராந்திய மையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
அத்துடன், 2017 ஏப்ரலில் நவ்ருவில் உள்ள அதிகாரிகளால் அவர் ஒரு ஏதிலியாக அங்கீகரிக்கப்பட்டார், ஆனால் உடனடியாக விடுவிக்கப்படவில்லை.
அவருக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்ட பதின்மூன்று மாதங்களுக்குப் பிறகு, சுகாதார சேவைகளுக்காக நவ்ருவில் உள்ள ஒரு ஆதரவு தங்குமிடப் பகுதிக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் மருத்துவ காரணங்களுக்காக அவர் 2018 நவம்பரில் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கு மாற்றப்பட்டார், ஆனால் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.