ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது என சமூக
நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய
அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (24.06.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விகாரைப் பிரச்சினை
“தையிட்டி விகாரைப் பிரச்சினையை அரசியல் கண்ணோக்கில் பார்க்கக் கூடாது.
பிரஜைகளுக்கும், விகாரைக்கும் இடையிலான பிரச்சினையாக மாத்திரம் பார்த்தால்
தீர்வினை பெற்றுக்கொள்ளலாம். அகற்றினால் பிரச்சனை வரும்” என அண்மையில்
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய ஆலோசனை குழு கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருப்பது
அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல.
அவரது அரசாங்கத்தின் நிலைப்பாடுமாக மட்டும்
கணிக்க முடியாது; அதனை சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் என்று தமிழர்களை
எச்சரிக்கும் தொனியாகவே நாம் கொள்ளலாம்.
அது மட்டுமல்ல அரச பயங்கரவாதம் சிங்கள
பௌத்தத்தை கவசமாகக் கொண்டு தமிழர் தேசத்தில் முன்னெடுக்கும் சட்டவிரோத சமய
ஆக்கிரமிப்புகளுக்கு திறந்த அனுமதி பத்திரமாகவே நாம் அடையாளப்படுத்த வேண்டும்.
இதுவா தேசிய மக்கள் சக்தியின் மாற்றத்தை நோக்கிய பயணம்? என இன
நல்லிணக்கத்தையும் அரசியல் நீதியையும் விரும்பும் மக்கள் அமைப்புகள் தமது
ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தல் வேண்டும்.
தையிட்டியில் அரசியல் நோக்கம் கொண்டு அரச பயங்கரவாத இராணுவத்தால் சட்ட விரோத
விகாரையினை சிங்கள பௌத்த பேரினவாத அரசின் துணையோடு வெற்றி அடையாளமாகவே கட்டி
எழுப்பப்பட்டுள்ள நிலையில் அரசியல் நோக்கில் பார்க்க வேண்டாம் என கூறி
ஜனாதிபதி தமிழர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதை ஏற்க முடியாது.
