டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா
வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக
மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று (08) கடிதமொன்றைக்
கையளித்தனர்.
இதன்போது, பல்கலைக்கழக
மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள்
ஆளுநருடன் பகிர்ந்து கொண்டனர்.
நெருக்கடி நிலை
இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக
பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட
துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி
நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர்.
மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம்
சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன்
தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர்
என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவு கூர்ந்தனர்.
இத்தகைய அர்ப்பணிப்புடன்
செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதியிடம்
பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர்.
ஜனாதிபதிக்கு நன்றி
மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு
நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப்
பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட
மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ
கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.
மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் உடனடியாகவே ஜனாதிபதியின்
கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார்.
