ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்,
யாழ்ப்பாணத்தின் செம்மணி புதைகுழியை பார்வையிட முழுமை ஏற்பாடுகள் செய்து
கொடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நான்கு நாள் சுற்றுப்பயணமாக அவர் நாளையதினம்(23) இலங்கைக்கு வருகிறார்.
செம்மணி புதைகுழியில், கடந்த கால மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் எச்சங்கள்
மீட்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுவதால், அது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
செம்மணிப் புதைகுழி
இந்தநிலையில் டர்க் அந்த இடத்தைப் பார்வையிடவும், அந்தப்பகுதியில் உள்ள
மக்களுடன் கலந்துரையாடவும் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று வெளியுறவு
அமைச்சர் விஜித ஹெராத் கூறியுள்ளார்.
முன்னதாக 2025 ஜூன் 7 ஆம் திகதி நிறைவடைந்த அகழ்வுகளின்போது, குறித்த
புதைகுழியில் இருந்து குறைந்தது 3குழந்தைகளினது உட்பட 19 பேரின்
எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து, கடந்த கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்கம்
தனது நேர்மையையும், நாட்டில் நல்லிணக்கத்திற்கான அதன் உறுதிப்பாட்டையும்
நிரூபிக்க விரும்புவதால், டர்க்குக்கு இலங்கையில் தடையற்ற அணுகல்
வழங்கப்படும் என்று அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், ஏற்கனவே ஏற்பாட்டில்
உள்ள சந்திப்புக்களை காட்டிலும், கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் சந்திப்பார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின்
முன்னேற்றத்தை அவர் மதிப்பிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது பயணத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்,
கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
