Home இலங்கை சமூகம் விசுவமடுவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்

விசுவமடுவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி
இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து
அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா
தண்டமும் நேற்றைய தினம் (07.11.2025) விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட விசுவமடு
பகுதியில் கடந்த 05.11.2025 அன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது,
உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் பொது சுகாதார
பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் இணைந்து குறித்த உணவகத்தினை பரிசோதித்தனர்.

இந்த சோதனையின் போது மருத்துவ சான்றிதல் இல்லாமை, உணவக அனுமதிப் பத்திரம் இன்மை,
தொழிலாளர்கள் முகச் சவரம் செய்யாமை, தண்ணீர் பகுப்பாய்வு சான்றிதல் இன்மை,
கழிவு தொட்டி இல்லாமை, அனுமதி பெறாதமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள்
காணப்பட்டன.

சுகாதார சீர்கேடுகள்

மேலும், வெற்றிலை மென்றவாறு உணவு கையாண்டல் போன்ற கடுமையான
சுகாதார மீறல்களும் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக உடையார்கட்டு
பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர்
றொய்ஸ்ரன் ஆகியோர் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான்
நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றம் உரிமையாளர்களை குற்றவாளிகளாக அடையாளம்கண்டு,
உணவகத்தை சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரை மூடுமாறு
உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டம் விதித்ததுடன்
எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்கள் இடம்பெறாதவாறு கடுமையான எச்சரிக்கையும்
வழங்கப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version