Courtesy: Ministry of Labour & foreign Emp
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
மனுஷ நாணயக்கார மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடையில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, இம்மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள தொகையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்கள் அமைச்சரிடம் இணக்கம் தெரிவித்துள்ளன.
வர்த்தமானி அறிவித்தல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்து அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மே 1ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இருப்பினும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அது தொடர்பில் முறையான ஒரு இணக்கப்பட்டை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதற்கமைய, இன்று (11.07.2024) இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார,
“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வினைத்திறனில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதனால் தற்போது அவர்களின் சம்பளத்தை வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக முன்னைய அமைச்சரவையின் தீர்மானத்தில் புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வரி உடன்படிக்கை
இவற்றின் மூலம் அந்த நிறுவனங்களுக்கான குத்தகைகள் இரத்து செய்யப்படும். எனவே, தற்போது சம்பளம் வழங்கியும் மற்றும் நீண்ட கால முதலீடுகளைச் செய்யக்கூடிய திறமையாக நிர்வகிக்கப்படும் தோட்டங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய குறுகிய கால வரி உடன்படிக்கை காலத்தை நீடிப்பதற்கும் எதிர்காலத்தில் நீண்டகால வரி உடன்படிக்கைகளுக்கு அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான விதிகளை தயாரிப்பதற்கும் கடந்த அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் அதனை மேலும் துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் உள்ள சட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இணக்கப்பாட்டின் போது பல பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மாதத்திலிருந்து நாளாந்த சம்பளத்தையும், அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் உத்தேச கொடுப்பனவையும் வழங்க தீர்மானித்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.