Home சினிமா வாழை திரைவிமர்சனம்

வாழை திரைவிமர்சனம்

0

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு வாழை. தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்துள்ள வாழை படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம் 

1999ல் நடக்கும் கதை இது, கதையின் நாயகன் சிவனைணாதான் தனது அம்மா மற்றும் அக்காவுடன் புளியங்குளத்தில் வாழ்ந்து வருகிறார். என்னதான் சேட்டைகள் செய்தாலும் படிப்பில் கெட்டிக்காரன், தனது வகுப்பிலேயே அதிக மதிப்பெண் எடுத்து முதல் மாணவனாக இருக்கிறார்.

பள்ளி விடுமுறை நாட்களில் தனது தாயின் வற்புறுத்தலினால் வாழைத்தார் சுமக்கும் தொழிலுக்கு அழைத்து செல்லப்படுகிறார் சிவனைணாதான். வீட்டின் வறுமை மற்றும் கடன் பிரச்சனையால்தான் படிக்கும் பிள்ளைகளுக்கு கூட இப்படி ஒரு நிலைமை ஏற்படுகிறது. ஆனால், சிவனைணாதானுக்கு இதை செய்ய விருப்பமில்லை.

இப்படியிருக்க வாழைத்தாரு வியாபாரியிடம் வேலை செய்யும் கலையரசன் தொழிலாளர்களுக்கு கூலியை ரூ. 1-ஆக உயர்த்தி தருமப்படி கேட்கிறார். முதலில் முரண்டு பிடிக்கும் வியாபாரி இறுதியில் அதற்கு ஒப்புக்கொண்டு, ஒரு வாழைத்தாருக்கு ரூ. 1 கூட்டி கொடுக்க சம்மதிக்கிறார். இதன்பின் என்ன நடந்தது என்பது தான் வாழையின் மீதி கதை.

வாழை படத்தை பார்த்து கண்கலங்கி முத்தமிட்ட பிரபல இயக்குனர்!!

படத்தை பற்றிய அலசல்

சிறு வயதில் தான் அனுபவித்த வலியை திரையின் மூலம் அழகாகவே நமக்கு கடத்தியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். சிவனைணாதானின் கதாபாத்திரத்தின் மூலம் மாரி செல்வராஜ் நமக்கு சொல்ல வந்த வலிமிகுந்த விஷயத்தை உணர முடிகிறது.

ஆசிரியராக வரும் நிகிலா விமல் கதாபாத்திரம் நம்முடைய பள்ளி பருவத்தை நினைவூட்டுகிறது. சிவனைணாதானுடன் இணைந்து சேகர் என்கிற கதாபாத்திரம் செய்யும் லூட்டிகளும், ரஜினி – கமல் ஹீரோக்களை வைத்து இருவரும் செய்யும் சேட்டைகளும் அதகளம் தான்.

திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியையும் அமைத்த விதம் அருமை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி மனதை உலுக்குகிறது. பெரும் பாதிப்பை நம் மனதில் ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகளின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. எந்த குறையும் இல்லை.

ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்திற்கு பலம் சேர்க்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், பாடல்களும் மாரி செல்வராஜின் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் திரையின் மூலம் நமக்கு கடத்திய வலிக்கு, இசையின் மூலம் துணை நிற்கிறார் சநா.

பிளஸ் பாயிண்ட்

மாரி செல்வராஜ் இயக்கம், திரைக்கதை

நடிகர், நடிகைகளின் நடிப்பு

தாக்கத்தை ஏற்படுத்தும் காட்சிகள்

கிளைமாக்ஸ் காட்சி

பின்னணி இசை


மைனஸ் பாயிண்ட்

பெரிதாக எதுவும் இல்லை

மொத்தத்தில் வாழை மாரி செல்வராஜின் வலி மிகுந்த வாழ்க்கை.. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும்.

NO COMMENTS

Exit mobile version