Home இலங்கை பொருளாதாரம் வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட திரவப் பால் மற்றும் தயிர்

வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட திரவப் பால் மற்றும் தயிர்

0

வற் (VAT) வரி எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திரவப் பால் மற்றும் தயிர் மீதான வற் வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டு அறிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட மசோதா

வற் வரி திருத்த மசோதா ஏப்ரல் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramarathne) ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.

அதன்படி, தொடர்புடைய சட்டம் குறித்த திகதியில் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல வரித் திருத்தங்களைச் செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் நாப்தா மீதான வற் வரியும் நீக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவைகள்

புதிய வரி திருத்தத்திற்கு அமைவாக, வெளிநாடு வாழ் தனிநபர்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரியை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வெளிநாட்டு நபர்கள் இலங்கை தனிநபர்களுக்கு மின்னணு தளங்கள் மூலம் வழங்கும் சேவைகளுக்கு வற் வரி பொருந்தும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version