Home இலங்கை சமூகம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்

வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்

0

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27, 1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த இவர், ஆயுதங்களைக் கைவிட்டு, அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

உண்ணாவிரதம்

1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோது, 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். ஒரு கொள்கையில் ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க முடியும், ஒரு போராட்டத்தை எவ்வளவு உன்னதமாக நடத்த முடியும், அதன் தாக்கத்தை எந்த அளவுக்கு மக்களிடம் கடத்த முடியும் என்று உலகுக்கே உணர்த்திய போர் வீரர் திலீபன்.

தன் மக்களுக்காக 12 நாள்கள், அதாவது 265 மணி நேரமாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட உடலுக்குள் செலுத்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், தன் 23-ம் வயதில், 1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார்.

அவரின் 37-வது நினைவு தினமான இன்று, இலங்கை தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

அந்தவகையில், தமிழர் தாயக காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா வீதி அபிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

தியாக தீபம்

இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி,ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், தமிழர்களுக்குமான தீர்வு கிடைக்கும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை.

சர்வதேச பொறிமுறையூடாகவே எமது பிள்ளைகளை கண்டுபிடிக்க முடியும். நாம் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புக்களை நாடியே எமது போராட்டங்களை முன்னெடுத்து நிற்கின்றோம் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version