Home இலங்கை சமூகம் சுற்றுலா வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

சுற்றுலா வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (12) நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்படி, இலங்கைக்கான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனை

ஆனால் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், 250 சிறிய பேருந்துகள் மற்றும் 75 வேன்களை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குமுறைகள் மற்றும் மேற்படி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் பாராளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version