மன்னார் மாவட்ட ஆயர் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை சுவிட்சர்லாந்தில் உள்ள சைவநெறிக்கூடம் – பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில், சுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை (20) குறித்த ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது ஆயர் சைவநெறிக்கூடத்தின் சார்பில் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், பேர்ன் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக உறுப்பினர் அன்ரன் கெனடி பிரான்சிஸிசுடன் இணைந்து பொன்னாடை அணிவித்து மதிப்பளித்தனர்.
நினைவுப்பரிசு
அத்துடன் பல்சமய இல்லத்தின் 10 ஆண்டு நிறைவு மலர் நினைவுப்பரிசாக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமாரால் அளிப்பட்டது.
கருவறையில் தாய்மொழி செந்தமிழில் நடைபெறும் வழிபாடுகள், மீளெழுச்சி வைசநெறி, தமிழர் களறி ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் ஆகியவை ஆண்டகைக்கு விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டன.
அத்தோடு ஐரோப்பாவில் இயங்கும் பல்சமய வழிபாட்டு இடங்கள் மற்றும் பேர்ன் பல்சமய இல்லத்தின் செயற்பாடுகள் குறித்தும் அவர் பார்வையிட்டார்.
மேலும் சுவிற்சர்லாந்து பேர்னில் நடைபெறும் பன்முக பல்லினப் பண்பாட்டு செயற்பாடுகள், சைவநெறிக்கூடம், பல்சமய இல்லம் மற்றும் பேர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் சமயக் கல்வி, முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கும் முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடல்
இலங்கையின் புத்தளத்தில் உருவாகவுள்ள பல்சமய இல்லப்பணிகள் குறித்தும் அறிமுகம் அளிக்கப்பட்டது.
தாயகத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய கூட்டுப் பணிகள் தொடர்பான இணக்கப்பாடுகள் இக்கலந்துரையாடலின் முக்கிய பொருளாகவும் அமைந்தது.
இதன்போது ஆண்டகை கருத்து தெரிவிக்கையில், சைவநெறிக்கூடமும் நாமும் இனமாக என்றும் ஒருமித்து இன மொழிப், பண்பாட்டுப் பணிகளை நெகிழ்வின்றி முன்னெடுப்போம்.
தாயகத்தில் பேர்னில் இயங்கும் பல்சமய இல்லம்போன்ற பல்லசமய இல்லப்பணிகளில் தாமும் இணைந்து தொண்டாற்ற விருப்பினையும் இசைவினையும் தெரிவித்தார்.
