Courtesy: தவசீலன்
முல்லைத்தீவு துணுக்காய் – ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரினால்
நோயாளர் காவு வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த
மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் நினைவு வளாகம் ஒன்றை அமைக்கவுள்ளதாக துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுஜன்சன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு துணுக்காய் – ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரினால்
நோயாளர் காவு வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த
மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம் எதிர்வரும் 27 ம் திகதி
அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இந்த நினைவு நிகழ்வு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதேச
சபை உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆழ ஊடுருவும் படையின் தாக்குதல்
இலங்கை ஆழ ஊடுருவும் படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்த மாணவச் செல்வங்கள்
மற்றும் பணியாளர்களுடைய நினைவுத்தூபி உள்ளடங்களான ஒரு நினைவுகளாகத்தை குறித்த
இடத்தில் அமைப்பதற்கு பல தடவை முயற்சித்த போதும் இம்முறை பிரதேச சபையில்
தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த நினைவுவளாகத்தை அமைப்பதற்கான
முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாகவும் இதற்காக உதவிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு
விடுத்திருக்கின்றார்.
அதேவேளை இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போன்று இடம்பெறும் எனவும்
அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் இந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை
நாங்கள் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் குறித்த மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு துணுக்காய் – ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரினால்
நோயாளர் காவு வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் நோயாளர்
காவுவண்டியில் பாடசாலை சீருடையுடன் பயணித்த மாணவிகளான – “நாகரத்தினம் பிரதீபா
(வயது-16), நாகரத்தினம் மதிகரன் (வயது-15), நித்தியானந்தன் நிதர்சனா
(வயது-13), கருணாகரன் கௌசிகா (வயது-15), சந்திரசேகரம் டிறோஜா (வயது-16),
அற்புதராசா அஜித்நாத் (வயது-17)ஆகிய ஆறு மாணவர்கள் மற்றும் சுகாதாரத்
தொண்டர்களான சண்முகவடிவேல் சகுந்தலாதேவி (வயது-19), மாரிமுத்து கிருஸ்ணவேணி
(வயது-21)” ஆகியோருமாக எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.