Home இலங்கை சமூகம் இலங்கை தமிழர்களுக்கெதிரான பாதுகாப்பு படையினரின் மோசமான செயல்கள்: வெளியான சர்வதேச அறிக்கை

இலங்கை தமிழர்களுக்கெதிரான பாதுகாப்பு படையினரின் மோசமான செயல்கள்: வெளியான சர்வதேச அறிக்கை

0

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) ஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளது. 

இந்த அறிக்கையின்படி, தமிழீழ மற்றும் தமிழ் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்புப் படைகளால் மிகவும் மோசமான முறைகளில் விசாரணை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் வாழும் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கடத்தல், தடுத்து வைப்பு, சித்திரவதை, மோசமாக நடத்துதல், பாலியல் வன்முறை தொடர்பான சமீபத்திய குற்றச்சாட்டுக்களை ஓஎச்ஆர் ஆய்வு செய்துள்ளது. 

இதன்போது, குறித்த குற்றச்சாட்டுக்களில் சில 2024ஆம் ஆண்டு ஜனவரியிலும் இடம்பெற்றுள்ளதுடன் இவற்றின் போது பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட 8 பேரிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் ஒரு தெளிவான கண்ணோட்டம் கிடைத்துள்ளதாக ஓஎச்ஆர் கூறியுள்ளது. 

விசாரணை நடவடிக்கைகள் 

இதற்கமைய, காணாமல் போனவர்கள் தொடர்பான நினைவு கூரல்கள், காணி, சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டங்கள் அல்லது போரில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான நினைவுகூரல்களில் கலந்து கொண்டவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் அல்லது அதில் இணைந்து செயற்பட்டிருந்தவர்கள் மீதே விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அவற்றின் போது, அவர்கள் கண்காணிக்கப்பட்டு, அல்லது படம்பிடிக்கப்பட்டு, பின்னர் பொலிஸ் சி.ஐ.டி என்று அறிமுகப்படுத்தும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சில சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அவர்கள் காணாமல் போனது தொடர்பில் பொலிஸாரிடம் அல்லது இலங்கை மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் முறையீட்டுள்ளார்கள். இம்முறையீடுகளின் பிரதிகள் ஓஎச்ஆர் இற்கும் காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாலை நேரத்தில் அல்லது இரவு வேளைகளில் வரும் அதிகாரிகள், தமது கண்களைக் கட்டி தூக்கி, வானில் ஏற்றி, கிட்டத்தட்ட 30 நிமிடங்களிலிருந்து இரண்டு மணிநேரப் பயண தூரத்தில் இருக்கும் தமக்கோ அல்லது தமது குடும்பங்களுக்கோ தெரியாத இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் விபரித்துள்ளார்கள். 

அது மாத்திரமன்றி, வெளிநாடுகளிலுள்ள முன்னாள் போராளிகளுடனான தொடர்புகள், நிதிச்சேகரிப்பு, ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள், விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வது தொடர்பில் வாக்குமூலங்களைப் பெறல், புதைக்கப்பட்ட ஆயுதங்கள் அல்லது பணம் தொடர்பான தகவல்களை பெறல் போன்றவற்றுக்காக மூன்று – ஐந்து நாட்கள் வரை அவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மனதாபிமானமற்ற செயல்கள் 

இவற்றின் போது பல்வேறு விதமான, கொடூரமான, மனிதத்துவமற்ற, நாகரிகமற்ற முறைமைகளை இங்கை பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தியதைக் காட்டும் நம்பகரமான அறிக்கைகளை ஓஎச்ஆர் கண்டறிந்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில் அல்லது விசாரணைகளின் போது மிகவும் கொடுரமான முறையில் பாலியல் வன்புணர்வு தமக்கு இழைக்கப்பட்டதாக நேர்காணலில் பலர் கூறியுள்ளனர். 

மேலும், தம்மீது மேற்கொள்ளப்படும் தகாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு வேறு வழியின்றி, தாம் கதைகளை உருவாக்கிச் சொன்னதாக அல்லது ஒத்துக்கொண்டதாகவும், வெற்றுத்தாள்களில், தமக்குப் தெரியாத சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களில் கையொப்பமிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், ⁠⁠தமது குடும்ப உறுப்பினர் ஒருவர், இடைத்தரகர் ஊடாக, பாதுகாப்புப் படைகளுக்கு இலஞ்சம் கொடுத்தப் பின்னரே தாம் இறுதியாக விடுவிக்கப்பட்டதாக பெரும்பாலும் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்ட அனைவருமே கூறியுள்ளனர். 

அதன்பின்னர், அவர்கள் இலங்கைகைய விட்டு வெளியேறிய பின்னரும் பெரும்பானவர்களது குடும்பங்களின் வீடுகளுக்கு தம்மைத்தேடி தேடி அல்லது தாம் தடுப்பிலிருந்து தப்பியோடி விட்டதாகக் கூறி பாதுகாப்பு அல்லது புலனாய்வு முகவர்கள் சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் பதில் 

இவர்களது, உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பற்றியும், வழங்கிய தகவல்களின் உண்மை தன்மை பற்றியும், ஓஎச்ஆர் கவனமாக ஆய்வு செய்துள்ளது.

மேலும் அவர்கள் வழங்கிய தகவல்கள் மிகவும் விரிவானவையாகவும், சீரானதாகவும் இருந்ததுடன், இவர்களது வாக்குமூலங்கள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தொடர்பாக முதன்முறையாக உரையாடுவதாக ஓஎச்ஆர் நேர்காணலின் போது பாதிக்கப்பட்டவர்களில் பலரும் கூறியுள்ளார்கள்.

அத்துடன், இவர்களில் பலரும் மருத்துவ மற்றும் உளவள சிகிச்சைகளைப் பெற்று கொண்டிருந்ததுடன், உளவள ஆற்றுப்படுத்தலையும் பெற்று கொண்டிருந்தார்கள்.

 ஓஎச்ஆர், இலங்கை அரசாங்கத்திற்கு இந்த சம்பவங்களில் சுருக்கத்தினை வழங்கி, அவர்களிடம் இது தொடர்பான மேலதிக விளக்கத்தினை கேட்டுள்ளது.

இதன்போது, இக்குற்றச்சாட்டுக்களிற்கு போதுமான விபரங்கள் இல்லை என்பதைத் தெரிவித்த அரசாங்கம், ஆட்கடத்தல், சட்டவிரோத தடுத்துவைப்பு, மற்றும் சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டுக்களை தீவிரமாக எடுத்துக்கொள்கின்றது என்றும், முழுமையான விசாரணைகளையும், சட்டநடவடிக்கைகளையும் மேற்கொள்ளவதில் அது உறுதியாக இருக்கின்றது என்றும் பதிலளித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version