Home இலங்கை சமூகம் குரல்வளைகளை நசுக்கலாம் ஊடகவியலாளர்களின் குரல்களை நசுக்க முடியுமா….!

குரல்வளைகளை நசுக்கலாம் ஊடகவியலாளர்களின் குரல்களை நசுக்க முடியுமா….!

0

இன்று என்ன நாள், பேனா எனும் ஆயுதமேந்தி உரிமைகளுக்காகவும் உண்மைகளுக்காகவும் குரல் கொடுக்கும் வீரர்களுக்கு களம் வழங்கும் தளத்தின் சுதந்திர நாள், ஆம் இன்று சர்வதேச ஊடக சுதந்திர நாள். 

உரிமைகளை வேண்டிய உழைப்பாளர்களில் உயிர்நீத்த தியாகிகளால் உதித்த உன்னத நாளின் நினைவுகள் ஓய்வதற்குள் என்றும் மனதுக்குள் கனந்து கொண்டிருக்கும் உரிமை நாளும் நெருங்கி வந்திருக்கிறதென்றால் இதை என்னவென்று உரைப்பது, எதை சொல்லித் தீர்ப்பது.

1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒற்றைச் சொல்லாய் ஒரே முடிவாய் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 3 ஆம் திகதி “சர்வதேச ஊடக சுதந்திர தினமாக” பிரகடனப்படுத்தப்படும் என்று அறிவித்து விட்டது, ஆனால் நவீன நூற்றாண்டின் இந்தக் கணம் வரையும் அந்த சுதந்திரத்தை கண்டிட மாட்டோமா என ஏங்கும் அத்தனை பேனா முனை போராளிகளின் சாட்சியாய் நாமும் கேட்கிறோம்
எப்போது உண்மையான ஊடக சுதந்திரம் கிடைக்கும்.

ஆண்டாண்டு காலமாய் அச்சமின்றி உண்மையை உள்ளபடி துணிந்து கூறிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதால் இந்தக் கேள்வி எழுகிறதா, இல்லையென்றால் நாட்டின் பேரினவாத அரசியல்வாதிகளின் பிரத்தியேக கூட்டங்களில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் இந்தக் கேள்வி எழுகிறதா,

அல்லாது போனால் துறவறம் பூண்ட பிக்கு நடு வீதியில் நின்றுகொண்டு காணொளிப்பதிவுகளை அழித்துவிடவில்லை என்றால் இந்த எல்லையை தாண்டி உயிருடன் செல்லமுடியாது என்று ஊடகவியலாளர்களை மிரட்டியதால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறதா.

உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவுதினம்

இவை எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான், இதுவரை நடந்தது, இப்போது நடப்பது இனி நடக்கப்போவது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் ஒற்றைக் குரலாய் கேட்கிறோம் எப்போது உண்மையான ஊடக சுதந்திரம் கிடைக்கும்.

ஊடக சுதந்திரம் இலங்கையில் மாத்திரமா பறிக்கப்படுகிறது, உலக நாடுகள் ஊடகவியலாளர்களை தாங்குகிறார்களா என்ன, அங்கும் அச்சுறுத்தல், கொலைமிரட்டல் ஏன் கொலைகளும் நிகழ்ந்தேறி ஊடகவியலாளர்கள் உயிரை காக்க தொழிலை மாற்றும் நிலை வரை இந்த உலகம் தள்ளியிருக்கிறது என்றால் இது இனப்படுகொலைகளை காட்டிலும் கொடிய அழிப்பு என்றல்லவா சொல்லவேண்டியுள்ளது.

உண்மையை உள்ளபடி கூறல், பக்கச்சார்பின்றி நேர்மையாக கருத்தாடுதல், திரைமறைவில் அரங்கேறும் அட்டூழியங்களை பகிரங்கமாக படம்பிடித்துக்காட்டுதல் இவை தானே ஒரு ஊடகவியலாளரின் பணி, அந்தப் பணியை படம் போடும் தளங்களான வானொலியும், தொலைக்காட்சியும், ஏன் பத்திரிக்கை போன்ற ஊடகங்கள் இன்று தம் சுதந்திரத்தை இழந்து செயற்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பது தானே நிதர்சனமான உண்மை.

அமைச்சர் டக்ளஸின் அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

இலங்கை நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு நேரும் அநீதியும் ஊடகங்கள் மீது பாயும் அடக்குமுறைகளும் அன்றாடம் நாம் அறிந்ததே, கடல் கடந்து இன்று உலகை உலுக்கும் மத்திய கிழக்கின் போர் நிலமும், இன்று பல ஊடகவியலாளர்களின் குருதியில் நனைந்து கிடப்பது என்பது மறுக்க முடியாத உண்மை தானே.

உணவு, உறைவிடம், தூக்கம் ஏன் தம் இன்னுயிரையும் துச்சமென மதித்து எங்கும், எப்பொழுதும் உண்மைகளைத் தேடி ஓடும் ஊடகவியலாளர்களின் குரல்கள் நசுக்கப்படுவது, ஊடகங்களை நசுக்குவதற்கு ஒப்பானது, இதன் வாயிலாக ஊடக சுதந்திரம் மீறப்படுகிறது என்றால் அங்கே மறுப்பதற்கு எதுவுமில்லை.

ஒன்று மட்டும் மறுக்க முடியாதது, உண்மையை ஒரு போதும் நசுக்கி ஒடுக்கி விட முடியாது அது பெரும் ஆயுதமாக இருந்தாலும் சரி, பெரும்பான்மை இனத்தின் ஆனவமாக இருந்தாலும் சரி அவற்றால் நசுக்கப்பட நசுக்கப்பட உண்மை இன்னும் ஓலமிட்டு சப்தமாக பேரிடியாக வெளிவரும், அன்று ஊடகங்களும் பேனா முனையில் போர் தொடுக்கும் புரட்சியாளர்களான ஊடகவியலாளர்களும் உலகில் உயர்ந்தவர்களாக நிலைத்து நிற்பர் இதுவே நிதர்சனம்.

ஊடங்கங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்? எளிதான கனியல்ல அது எட்டிப்பறித்துவிட, இன்னும் காலம் செல்லும் அதை நாம் பற்றிப்பிடிப்பதற்கு, ஆனால் ஊடக சுதந்திரம் அது நிச்சயம் மலர்ந்தே தீரும், அதை உரக்கச் சொல்லவே விருப்பம் ஆனால் உண்மையை வெளிப்படையாக சொன்னாலும் குற்றம்…. 

விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

 

NO COMMENTS

Exit mobile version