Home இலங்கை சமூகம் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட புள்ளி: தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட புள்ளி: தமிழ் ஆராய்ச்சி மாநாடு

0

நான்காவது உலகத் தமிழாராய்ச்சிப் படுகொலை இடம்பெற்று 50 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பிரித்தானியாவில் தமிழ் ஆராய்ச்சி படுகொலை தொடர்பான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நடுகல் நடப்பட்டது. இங்கே காணப்படக் கூடிய ஒவ்வொரு நடுகற்களும் அந்தப் படுகொலையிலே கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் விதமாக நடப்பட்டிருக்கின்றது.

ஆண்டு தோறும் நினைவு நாள் நடைபெறுகின்ற போது பெருமளவான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவது வழக்கமானது. இருந்தாலும் கூட இந்த இனப்படுகொலைக்கு நீதி கோருகின்ற வகையிலான ஒரு மாபெரும் எழுச்சியான போராட்டத்தை, இங்கே நடந்தது போலான ஒரு மாநாட்டை நடத்த முடியாத ஒரு சூழல் ஈழத்திலே இருக்கின்றது. இப்படியான சூழலிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

ஈழத்திலே விடுதலைக்காக போராடியவர்களுக்காக நடுகற்களைப் பார்த்திருக்கின்றோம். இது மொழிக்காக பண்பாட்டுக்காக ஒன்று திரண்டவர்கள் கொல்லப்பட்டிருந்த சமயத்திலே அவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நடுகற்கள் தான் இவை.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நகரம், வடக்கு மாகாணம் அதேபோல தமிழர் தேசம் ஒரு மாபெரும் எழுச்சிக் கோலம் பூண்டிருந்தது. பண்பாட்டு எழுச்சியாக, மொழியினுடைய எழுச்சியாக அன்றைக்கு ஈழம் எழுச்சி பூண்டிருப்பதை அன்றைய சிறிமா அரசு தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுகின்றது.

இந்த மாநாட்டிலே தம்மை விருந்தினராக அழைக்கவேண்டும் என அன்றைய பிரதமர் சிறிமா விரும்புகின்றார். அதனை மாநாட்டுக் குழு மறுக்கின்றது. இந்தச் சூழலில் அந்த மாநாட்டுக்கான பல்வேறு தடைகளை இலங்கை அரசு விதித்தது.

ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவிருந்த போது அவர்களை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பியதில் இருந்து பல நிகழ்வுகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டு அனுமதிகள் மறுக்கப்பட்டது. 

இந்த தடைகளை எல்லாம் தாண்டி அரசினுடைய அச்சுறுத்தல்கள், சவால்கள் எல்லாவற்றையும் தாண்டி தவத்திரு தனிநாயகம் அடிகளாரால் நினைவுத்தூபிக்கு எதிரே இருக்கக்கூடிய வீரசிங்கம் மண்டபத்திலே வைத்து 1974 ஆம் ஆண்டு ஜனவரி 09 அன்று இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.  

பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் இந்த மாநாட்டிலே இடம்பெற்றவேளை ஜனவரி 10ஆம் திகதிஅந்த அசம்பாவிதம் நடைபெற்றிருந்தது. இங்கே நடுகற்களாக இருக்கக் கூடிய எவருமே நினைத்திருக்க மாட்டார்கள் நாங்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுவோம் என்று.

படுகொலை நிகழ்த்த திட்டமிட்ட சந்திரசேகர தலைமையிலான காவல்துறைக்குழுவினர் அதிலும் அனுராதபுரத்திலிருந்து இதற்காக ஒரு வன்முறைக் காவல்துறை குழுவினர் அழைத்து வரப்பட்டதாக சொல்லப்படுகின்றது. 

அவர்கள் மின்கம்பங்களின் மீது துப்பாக்கிச் சூடுகளை நடத்தி அவை மக்கள் மீது அறுந்து மிகப் பரிதாபமாக 11பேர் இறந்திருந்தார்கள். பலர் காயமடைந்திருந்தார்கள். 

இலங்கை அரசு மிகத் திட்மிட்ட வகையிலே இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த விடாமல் எடுத்த முஸ்தீபுகளின் முடிவாக இந்தப் படுகொலை நடந்தது. 

இந்தப் படுகொலையானது தமிழ் இனத்தின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்கத்தைச் செலுத்தியது. பின்வந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட ஒரு இனப்படுகொலையாக அமைந்தது. பொன் சிவகுமாரனிலிருந்து பலரை உருவாக்கிய படுகொலையாக மாறியது.

இந்த சூழ்நிலையிலேயே அதற்கான நீதி இன்னமும் கிடைக்கப்பெறாத நிலையிலே எதிர்வருகின்ற 30ஆம் திகதி பிரித்தானிய தேசத்திலே இந்தப் படுகொலையின் 50ஆவது ஆண்டை நினைவுகூரும் விதமான ஒரு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்விலே பிரித்தானிய தேசத்திலே வசிக்கக் கூடிய தமிழ் உறவுகள் மற்றும் உலகெங்கும் வசிக்கக் கூடிய தமிழ் உறவுகள் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இனப்படுகொலையிலே கொல்லப்பட்டவர்களுக்காகவும் ஒட்டுமொத்தமாக இனப்படுகொலையிலே கொல்லப்பட்டவர்களுக்குமான நீதிக்காகவும் அங்கு பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

 

https://www.youtube.com/embed/tHGPEyfaSLA

NO COMMENTS

Exit mobile version