Home இலங்கை சமூகம் எழுத்தாளர் தீபச்செல்வன் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் சொல்வதென்ன..!

எழுத்தாளர் தீபச்செல்வன் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் சொல்வதென்ன..!

0

Courtesy: uky(ஊகி)

ஈழ எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் தீபச்செல்வன் மீது அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் என்ன சொல்ல விளைகின்றன என்ற கேள்வி ஈழ இலக்கியவாதிகளிடையே தோன்றி நிற்கும் கேள்வியாக அமைய வேண்டும்.

ஆயினும் அப்படி எழ வேண்டிய கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளதாக தெரியவில்லை என சமூகவியல் கற்றல்களில் ஈடுபட்டு வருவோர் குறிப்புரைக்கின்றனர்.

எழுத்தாளர் தீபச்செல்வன் கவிதைகளையும் நாவலையும் நூல்களாக வெளியிட்டுள்ளார்.அத்தோடு இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.

இந்தியாவில் பிரபலமான பத்திரிகைகளிலும் தீபச்செல்வன் ஈழம் பற்றிய தன் கட்டுரைகளை எழுதிவரும் ஒருவராகவும் துறைசார் நிபுணத்துவத்தினை பெற்றுள்ள தமிழறிஞர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் கிளிநொச்சியில் வாழ்ந்துவரும் அவர் பாடசாலையின் தமிழ்ப்பாட ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.

இத்தனைக்கும் மேலாக அவர் நடுகல், பயங்கரவாதி என்ற இரு நாவல்களை எழுதியதன் மூலம் உலகம் முழுதும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

சிங்கள இலக்கியவாதிகளின் பேராதரவையும் அவர்களது நன்மதிப்பையும் பெற்றுள்ள ஈழத்தமிழ் எழுத்தாளராகவும் எழுத்தாளர் தீபச்செல்வன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைகள் ஆரம்பம் 

எழுத்தாளர் தீபச்செல்வன் மீதான விசாரணைகள் எப்போது ஆரம்பமானது என்ற கேள்வி விசாரணைகள் நடைபெற்ற காலத்தை அடிப்படையாகக் கொண்டு பல கேள்விகளை எழ வைக்கின்றது.

முதலில் நடுகல் நாவல் மூலம் தன்னை ஈழத்தமிழர்களிடையே பேசுபொருளாக்கிய தீபச்செல்வன் மீது எத்தகைய விசாரணை அழுத்தங்களும் இப்போதுள்ளது போல் இருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து பயங்கரவாதி நாவலை எழுதியிருந்தார்.அப்போதும் கூட விசாரணைகள் முனைப்புப் பெற்றிருக்கவில்லை.இவற்றை எல்லாம் விட தீபச்செல்வன் எழுதிய நான் சிறிலங்கன் இல்லை என்ற கவிதைத் தொகுப்பு கூட இத்தகைய ஒரு விசாரணைக்கு அவரை தள்ளிவிடவில்லை.

அப்படி இருக்கும் போது ஏன் இப்போது அவர் மீது விசாரணைகள் தேவை என்ற கேள்வி எழுவதை தடுத்து விட முடியாது.ஆயினும் அதன் அடிப்படையில் தீபச்செல்வன் மீதான விசாரணைகள் எதைச் சொல்ல முனைகின்றன என ஆராய்ந்து கொள்ள முடியும் என்பது திண்ணம்.

இலங்கை குடிமகனாக இருந்து கொண்டு ஒரு ஆசிரியராக இருப்பதால் இலங்கையின் அரச இயந்திரத்தின் ஒரு கூறாக அதாவது ஒரு உறுப்பினராக இருந்து வரும் தீபச்செல்வன் நான் சிறிலங்கன் இல்லை என தலைப்பிட்டு ஒரு கவிதை நூலை வெளியிடுகின்றார்.

தொடரும் அழுத்தங்கள் 

அப்போது அவரை அழைத்து நீங்கள் சிறிலங்கன் இல்லை என்றால் நீங்கள் யார்? என்ற ஒரு கேள்வியை கேட்டு தீபச்செல்வன் மீது விசாரணைகளை வலுவாக ஆரம்பித்திருக்கலாம்.ஆயினும் அப்படி நடந்திருக்கவில்லை என்பது இங்கே நோக்கத்தக்கது.

இத்தகையதொரு சூழலில் எழுத்தாளர் தீபச்செல்வன் மீதான விசாரணைகள் ஏன் இப்போது தேவையாக உள்ளது.

தேர்தல் கால அரசியல் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருக்கின்றதா? அல்லது ஈழ எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை பதிவு செய்வதிலிருந்து அவர்கள் விலகிச் செல்வதற்கான அழுத்தமாக இது முன்னெடுக்கப்படுகின்றதா?

இத்தகைய ஈழ எழுத்தாளர்களின் மீது விசாரணைகள் என்ற பெயரில் தொடரும் அழுத்தங்கள் கடந்த காலத்தில் ஈழத்தமிழ் சமூகத்தின் மீதான இலங்கை அரசாங்கங்கள் மற்றும் இலங்கை அரச இயந்திரத்தினால் திணிக்கப்பட்டு பிரயோகிக்கப்பட்டிருந்த வன்முறைகளை, அவர்களின் இருப்பு மீதான அச்சுறுத்தலை, இனவழிப்புக்கான முயற்சிகளை, பொருளாதார பண்பாட்டு அழிப்பை, வரலாற்று சிதைப்பை , இட ஆக்கிரமிப்பை எதிர்கால சந்ததிகள் அறிந்து கொள்வதை தடுக்கும் முயற்சியாக இருக்கின்றதோ? என்று எண்ணத் தோன்றுவதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நெருப்பாறு

தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பின் தலைவராக இருந்து வரும் தீபச்செல்வன் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் எழுதிய
34 நாட்களில் நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற நாவலை 10.02.2024 பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் வெளியீடு செய்திருந்தார்.

ஈழத்தில் நடந்த வீரமிகு போர் நிகழ்வொன்றை அடியொற்றி எழுதப்பட்டிருந்த நாவலாக 34 நாட்களில் நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற யோகேந்திர நாதனின் நாவல் இருக்கின்றது.அது ஒரு கால நிகழ்வின் தழுவலாக எதிர்கால ஈழத் தமிழினத்திற்கு அந்த கால நிகழ்வினை கதைப் பாங்கில் சொல்ல முனைவதாக இருக்கின்றது.

உலகறிய நடந்த ஒரு நிகழ்வை அடியொற்றி எழுதுவதை தடுப்பதும் எழுதிய நூலை வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதும் ஜனநாயகத் தன்மையற்றது.எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு நெருக்கடி கொடுத்த நிகழ்வாக இந்த நூல் வெளியிடு இருந்தது என்பதும் நோக்கத்தக்கது.

இந்த நிகழ்வில் தமிழார்வலர்களும் கவிஞர் மற்றும் எழுத்தாளர் உட்பட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் மற்றும் சில மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் எழுத்தாளர் தீபச்செல்வன் மீது இரு தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முதலாவது விசாரணை நா.யோகேந்திரநாதனின் 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவலை வெளியீடு செய்தது தொடர்பில் ஆராயப்பட்டதோடு நடுகல் நாவல் பற்றியும் ஆராயப்பட்டிருந்தது.

இந்த விசாரணையின் நோக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு இந்த நூல்களின் வகிபாகம் என்ன என்பதாக இருப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தியிருந்தனர்.

ஆயினும் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு இலக்கிய செயற்பாட்டாளர் தீபச்செல்வன் முயற்சிக்கின்றாரா என்பதே அடிப்படையாக இருந்தது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.இது புலன் விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகள் மூலம் தெளிவாகின்றதையும் தீபச்செல்வனின் விசாரணையின் பின்னரான வெளிப்படுத்தல்கள் மூலம் அறிய முடிகிறது.

பயங்கரவாதி 

எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி என்ற நாவல் தொடர்பாக இரண்டாவது விசாரணை அமைந்திருந்தது.அந்த விசாரணையில் பயங்கரவாதி நாவலின் கதையோட்டம் மற்றும் அதன் கதை மாந்தர்கள் தொடர்பில் ஆராய்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

அந்த கதை மாந்தர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர் என்பதும் பயங்கரவாதி நாவல் எப்படி விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்திற்கு துணை நிற்கும் என்ற கோணத்திலும் வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தன் பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் செல்லும் ஒரு மாணவனின் ஒரு தமிழ் குடிமகனின் பயணமாகவே பயங்கரவாதி நாவலின் கதை அமைந்துள்ளது.

அந்த பயணத்தில் அவன் எதிர்கொண்ட சவால்களை ஒரு கால அவதானி போல் இருந்து நாவலாசிரியரான தீபச்செல்வன் பயங்கரவாதி நாவலை எழுதியிருக்கின்றார்.

ஒரு காலத்தின் பதிவாக இருக்கும் ஒரு இலக்கியப் படைப்பாகவே தீபச்செல்வனின் இரு நாவல்களும் உள்ளதோடு அவரது கவிதைகளும் உள்ளன.

இந்த சூழலில் எப்படி இவை விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் முயற்சியாக அமையும்?

நூல்களின் தோற்றத்தின் வழியில்

விடுதலைப்புலிகளுடன் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தின் தளபதிகள் பலரும் நூல்களை எழுதியுள்ளனர்.அந்த நூல்களில் விடுதலைப்புலிகளுடனான போரில் தங்களது அனுபவங்களை அவர்கள் தெளிவாகவே பதிவு செய்து வைத்துள்ளனர்.

இறுதிப்போரில் பங்கு வகித்திருந்த தளபதிகளில் ஒருவரான கமால்குணரட்ன தனது நூலில் விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனின் இயல்புகளை குறிப்பிட்டு அவரது போரியல் அணுகுமுறையைக் குறிப்பிட்டு அவரை பாராட்டி உள்ளார்.

அது போலவே இறுதிப் போரினை நெறிப்படுத்திய தளபதியான சரத்பொன்சேகா பல சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரை பாராட்டியுள்ள சந்தர்ப்பங்கள் உள்ளன.

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையின் முக்கிய தளபதிகள் தங்கள் நூல்களிலும் விடுதலைப்புலிகளை குறிப்பிட்டு பல அத்தியாயங்களை நகர்த்திக் கொண்டு சென்றுள்ளனர்.

கமால்குணரட்ன எழுதிய போரில் தனது அனுபவங்கள் சார்ந்த நூல் போலவே தீபச்செல்வன் எழுதிய நூல்களும் ஒரு காலத்தில் தனது அனுபவங்களை பதிவு செய்ததாகவே இருக்கின்றது.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்க வேண்டும் எனில் இளைஞர்களை அவர்களது உணர்வுகளால் கிளர்ந்தெழும் வகையில் தூண்டப்பட வேண்டும்.தீபச்செல்வனின் நாவலில் அப்படி இளைஞர்களின் உணர்வை தூண்டும் வகையில் எந்தவொரு பகுதியும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தின் நிகழ்வை அதன் வலியை தெள்ளத்தெளிவாக பதிவு செய்துள்ள தீபச்செல்வனின் செயல் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்திற்கு உதவும் என்றால் அது பொருத்தமற்ற கருத்தாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது அதன் கருவாக இருந்த பிரபாகரனால் மட்டுமே முடியும்.அவரன்றி வேறொருவரால் விடுதலைப்புலிகளை விடுதலைப்புலிகளுக்குரிய அதே வீரியமிக்க இயங்கு திறனோடு மீளுருவாக்கம் செய்வது என்பது முடியாதது.ஆதலால் பிரபாகரனன்றி மற்றொருவரை குறித்துரைத்து விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் என்றுரைப்பது வேடிக்கையான விடயமாகும்.

ராஜனி திராணகம உள்ளிட்ட நால்வரால் எழுதப்பட்ட முறிந்த பனை என்ற நூலும் அன்றைய யாழ்ப்பாணத்தின் கள யதார்த்தத்தினை படம் பிடித்துக் காட்டும் பல பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

தனிநாட்டுக்கான கோரிக்கை 

அமைதிப்படை என்ற பெயரில் இலங்கையின் வடக்கிற்கு வந்திருந்த இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய அட்டூழியங்களை அவர்கள் முறிந்த பனையில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஒரு காலத்தின் நிகழ்வுகளை பதிவு செய்வதால் இளைஞர்கள் தூண்டப்படுவார்கள் என்றால் முறிந்த பனையில் உள்ள பதிவுகள் எழுத்தாளர் தீபச்செல்வன் பதிவு செய்தவற்றை விட வலிமையானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீபச்செல்வனின் நாவல்கள் ஒரு காலத்தின் நிகழ்வை புனை கதையாகவே பதிவு செய்கின்றன.இலக்கிய போக்கிற்காக சில நிகழ்வுகளில் உண்மையின் சுவடுகள் அதே உணர்வுகளை ஏற்படுத்துவதாக இருக்காது போகலாம்.ஆனாலும் முறிந்த பனை நிகழ்வுகளை களங்களில் நேரடியாக சென்று பார்த்து அவற்றை வர்ணிப்பது மற்றும் ஆய்வுக்குட்படுத்துவதாக இருக்கின்றதோடு அதன் நூலாசிரியர் ராஜனி திராணகம மனிதஉரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளராகவும் யாழ் பல்கலைக்கழக பேராசிரியராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமுரசு வாரமலரில் அதன் அப்போதைய ஆசிரியராக இருந்த அற்புதன் தினமுரசு வாரமலரில் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரை எழுதி வந்திருந்தார்.அத் தொடர் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு காலத்தின் நிகழ்வுகளை பதிவுசெய்யவதாக இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரமிகு செயற்பாடுகள் மற்றும் போராட்டத்துக்கான நியாயங்களை அந்த தொடர் எடுத்தியம்புவதாக இருக்கின்றது.அற்புதனின் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரை படிக்கும் யாரொருவருக்கும் விடுதலைப்புலிகளின் போரியல் மற்றும் தமிழீழ தனிநாட்டுக்கான கோரிக்கை போன்றவற்றில் நியாயம் இருப்பதாகவே தோன்றும்.

நோக்கம் என்ன?

இலங்கை அரசாங்கம் காலத்துக்கு காலம் எடுத்துக்கொண்ட தவறான முடிவுகளின் விளைவே ஆயுதப்போராட்டத்தின் தோற்றமும் அதன் வீரியமிக்க வளர்ச்சியும் என்றால் அது சாலப் பொருந்தும்.

இங்கே அற்புதனோ அல்லது ராஜனி திராணகம இலங்கை அரசினால் அச்சுறுத்தப்பட்டதாக எந்தவொரு பதிவும் இல்லை.அவர்களைப் போலவே காலத்தின் நிகழ்வுகளை கேட்டும் தான் பட்டும் பதிவு செய்யும் தீபச்செல்வன் மட்டும் ஏன் அச்சுறுத்தப்படும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பொருத்தமான பதிலாக முனைப்புப் பெறும் ஈழ எழுத்தாளர்களை அச்சத்தின் மீது வாழ வைத்து அவர்களது பதிவுகளை தடுத்து விடும் நோக்கம் அல்லது சிங்கள மக்களிடையே அரசியல் செல்வாக்கினை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சியாகவே இருக்கும்.

இது விடுத்து ஈழ எழுத்தாளர்களின் தங்கள் அனுபவங்களை பதிவு செய்து கொள்வது மீதான விசாரணைகள் வேறொன்றையும் இலக்காக கொண்டிருக்க வாய்பில்லை.

அவர்கள் மீது சுமத்தப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கான முயற்சி என்ற குற்றச்சாட்டு மீண்டுமொரு தடவை தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதாகவே இருக்கும்.இந்த தவறின் விளைவுகளை அடுத்துவரும் காலங்களில் இலங்கை உணர்ந்து கொள்ளும் என்பது கடந்தகால அனுபவங்களின் வெளிப்பாடாகும்.

ஆகவே ஈழ எழுத்தாளர்கள் இலங்கையின் அரசாங்கங்களையும் இலங்கை அரசையும் தங்கள் எழுத்தின் நோக்கம் அதன் அவசியம் என்பவற்றை புரிந்துகொள்ளும் ஒரு புறச்சூழலை உருவாக்கி விட வேண்டும்.

எனெனில் முறையான திட்டமிட்ட இலக்கற்ற முயற்சியாகவே ஈழ எழுத்தாளர்களின் மீதான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் இருக்கின்றன.அவற்றை மாற்றியமைக்க ஈழ எழுத்தாளர்களின் திறமைமிக்க செயற்பாடுகளால் முடியும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அப்படி ஒரு செயற்பாடு இனிவரும் காலங்களில் தீபச்செல்வன் மீது ஏற்படுத்தப்படும் அழுத்தம் போல் ஒரு சூழலிற்கு ஈழ எழுத்தாளர் ஒருவர் தள்ளப்படும் போது குரல் கொடுப்பதற்கும் அழுத்தங்களை தவிர்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.

ஈழ எழுத்தாளர்கள் ஓரணியில் திரண்டு வடம்பிடித்து தேரிழுத்தாலே ஈழத்தமிழ் இலக்கியம் ஈழத்தமிழருக்கு ஆரோக்கியமான பாதையில் நகரும் என்பது எப்போது புரிந்து கொள்ளப்படுமோ அப்போது ஈழத்தமிழிலக்கியம் புதிய பாய்ச்சலை ஆரம்பிக்கும் என்பது திண்ணம்.

தாம் வாழும் காலத்தை படம் பிடித்து பதிவு செய்யாத எந்தவொரு இலக்கியமும் உயிரற்றதாகவே இருக்கும். காலப்பதிவாக அமைந்துவிடும் இலக்கியங்கள் வருங்கால சந்ததியின் மிகப்பெரிய வரலாற்று சொத்தாகும்.    

NO COMMENTS

Exit mobile version