கிளிநொச்சியில் கோயிலுக்குள் வழிபட சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயத்திற்குள் இன்று (28.10.2025) இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
19 வயது நிரம்பிய குறித்த இளைஞன் மீது சில பெண்களும் ஆண்களும் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தொடர்ச்சியாக இடையூறு
இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இந்த கோயிலுக்கு சென்று சுவாமிக்கு பூ வைத்து வழிபடுவதனை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் அவர் கோயிலுக்குள் செல்லக் கூடாது என சிலர் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர்.
கோயிலுக்குள் செல்லும் இளைஞனை புகைப்படம் எடுப்பது, எச்சரிப்பது என அவர்கள் தொடர்ச்சியாக இடையூறு விளைவித்து வந்துள்ளனர்.
ஆனால், இந்தக் கோயிலுக்கு செல்லவில்லை எனில், இரவில் உறக்கம் வராது வழமைக்கு மாறாக தான் இருப்பதாக உணர்வதாகவும் இளைஞன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்
எனவேதான் கோயிலுக்கு சென்று வழிப்படுவதனை வழமையாக கொண்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்றும் மாலை கோயிலுக்கு சென்ற போது கோயில் பூட்டப்பட்டிருந்தது எனவே நேரடியாக ஆலய தலைவரிடம் சென்று ஆலயத்தின் திறப்பை தருமாறு கெஞ்சி மன்றாடினேன். திறப்புக்கள் ஆலய பூசகரிடம் இருப்பதாக தெரிவித்த தலைவர் வெளியில் உள்ள காளி அம்மன் சுவாமியின் திறப்பை தந்தார்.
எனவே, நான் ஆலயத்திற்கு சென்று சுவாமிக்கு பூக்களை வைத்து வழிபட தொடங்க என்மீது சில பெண்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்து ஆண் ஒருவர் என் கழுத்தை பிடித்து தாக்கினார்” எனத் தெரிவித்துள்ளார்.
