சிம்பாப்வேயில் மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்யும் சட்டத்திற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி எம்மர்சன் மனாங்காக்வா ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த முடிவை “பிராந்தியத்தில் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்திற்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்” என்று உரிமைகள் குழுவான சர்வதேச மன்னிப்புசபை பாராட்டியுள்ளது.
ஆனால், அவசரகாலச் சட்டத்தின் போது மரண தண்டனையை மீண்டும் நிலைநிறுத்த முடியும் என்ற ஏற்பாடு குறித்து, மன்னிப்புசபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
வாக்களிப்பு
முன்னதாக சிம்பாப்வே நாடாளுமன்றம், கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் மரண தண்டனையை இரத்து செய்ய வாக்களித்ததைத் தொடர்ந்து மனாங்காக்வாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிம்பாப்வே கடைசியாக 2005இல் தூக்குத்தண்டனையை நிறைவேற்றியது. எனினும், நாட்டின் நீதிமன்றங்கள் கொலை போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனையை தொடர்ந்து வழங்கி வந்தன.
இதன்படி, 2023ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 60 பேர் மரண தண்டனை கைதிகளாக கருதப்பட்டதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது, சிம்பாப்வேயில் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதேவேளை, உலகளவில், ஆபிரிக்காவில் 24 நாடுகள் உட்பட 113 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2023ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகளை, சீனா, ஈரான், சவுதி அரேபியா, சோமாலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிறைவேற்றியதாகவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.