Home முக்கியச் செய்திகள் அன்னதான வரிசை மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

அன்னதான வரிசை மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

0

மீகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதியின் மீகொட சந்திக்கு அருகாமையில் கொடூரமான வாகன விபத்தொன்று  கடந்த 2026.05.31 ஆம் திகதி இரவு, சம்பவித்துள்ளது.

அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த ‘கப்’ (Cab) ரக வாகனமொன்று, வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘தன்சல’ (அண்ணதான) வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதிவிட்டு, நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 13 பேர் உடனடியாக ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும், அனுமதிக்கப்பட்ட தருணத்திலும் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் உட்பட மொத்தம் 06 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடந்த உடனே விரைந்து செயற்பட்ட கொடகம சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், தப்பியோட முயன்ற கப் ரக வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

 
உயிரிழந்த ஆண்கள் மூவரும் 35 முதல் 38 வயதுக்கு இடைப்பட்ட ஹங்வெல்ல மற்றும் அவிசாவளை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்த பெண்கள் மூவரும் 15 முதல் 56 வயதுக்கு இடைப்பட்ட பிலியந்தலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஓட்டுநர், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். விபத்து நடந்த தருணத்தில் அவர் கடுமையான மதுபோதையில் இருந்தமை பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஏனைய 7 பேர் ஹோமாகம மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீகொட பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(a)

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/150-377887

NO COMMENTS

Exit mobile version