அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 12ஆம் திகதி தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று (01) யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, எதிர்வரும் 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தேசிய மக்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கு வழங்கிய பல்வேறு வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தமிழ் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டம், காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் மக்களிடம் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அவற்றில் எதுவும் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அரசாங்கத்திற்கு உணர்த்துவதுடன், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7.30 மணியளவில் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன், இப்போராட்டத்திற்கு தமிழ் கட்சிகளின் இணைந்த அழைப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இந்தப் போராட்டமானது, ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளைப் பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளாக சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டாது இருப்பதைக் கண்டித்தும், திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை சார்ந்த விடயங்களைக் கண்டிக்கும் முகமாகவும், எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7.30 மணியளவில் தமிழ் மக்கள் சார்பில் தமிழ் அரசியல் கட்சிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அழைப்பு விடுத்துள்ளனர்.
