Home இலங்கை அரசின் நாசகார வேலைகளால் நாடும் ஜனநாயகமும் சீரழிவு.. சஜித் குற்றச்சாட்டு

அரசின் நாசகார வேலைகளால் நாடும் ஜனநாயகமும் சீரழிவு.. சஜித் குற்றச்சாட்டு

0
image

பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும் சீரழிந்து வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம கொங்வெலான பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசு 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளின் மீது பெரும் அடியைக் கொடுத்துள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தில் கைவைத்து அரசு ஜனநாயகத்தை சீரழித்து வருகின்றது.

பொருளாதாரத்தின் மீது அரசு தொடுத்த தாக்குதலால் வாழ்க்கைச் சுமை மற்றும் செலவுகள் அதிகரித்து காணப்படுகின்றன. 

மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும் உலகளாவிய விலைக்கு எரிபொருள் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தல் காலத்தில் அஸ்வெசும தொகை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும், தற்போது அஸ்வெசும தொகையும் பயனாளர்களின் எண்ணிக்கையும் அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டு வருகின்றன. வறுமையை ஒழிப்பதற்கான காத்திரமான திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை.

விவசாயிகள் விதை மற்றும் உர விலை உயர்வுடன், யானை – மனித மோதல்களுக்கு மத்தியிலும் உற்பத்தியை மேற்கொண்டாலும் நிலையான விலை கிடைக்கவில்லை. 

150 ரூபா வாக்குறுதி மீறப்பட்டு, விவசாயிக்கு நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மீதான வரித் தாக்குதல்கள் மற்றும் பராட்டே சட்டம் காரணமாக இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்றார்.

 

Source: https://samugammedia.com/sajith-alleges-that-the-country-and-democracy-are-being-degraded-due-to-the-governments-destructive-activities-1788575030

NO COMMENTS

Exit mobile version