Home இலங்கை இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஐ.நா. அதிருப்தி… முக்கிய பரிந்துரைகள் வெளியீடு

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஐ.நா. அதிருப்தி… முக்கிய பரிந்துரைகள் வெளியீடு

0
image

எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கவலை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, அதனை விரைவாக இரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் போன்ற முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதால் தன்னிச்சையான கைதுகளும், குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2025ஆம் ஆண்டில் காவலில் அல்லது தடுப்புக் காவலில் இருந்தபோது இடம்பெற்ற 18 மரணங்களும், 2026 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 2025ஆம் ஆண்டில் சித்திரவதை மற்றும் கொடூரமான தாக்குதல்கள் தொடர்பாக 602 சம்பவங்களும், 2026 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் 138 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சில வழக்குகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும், யுத்த காலத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை நிலையான பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட இராணுவ மற்றும் சிவில் புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மட்டத்திலான கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, அதனை விரைவாக இரத்து செய்து புதிய சட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்பதும் முக்கிய பரிந்துரையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவித்தல், மேலதிக காணி சுவீகரிப்புகளை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம், ICCPR சட்டம் மற்றும் வரைவிலுள்ள NGO சட்டம் ஆகியவற்றை திருத்துதல் அல்லது இரத்து செய்தல் தொடர்பான பரிந்துரைகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசல் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக சுகாதார அடிப்படையிலான மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

Source: https://samugammedia.com/un-expresses-dissatisfaction-with-sri-lankas-human-rights-record-key-recommendations-released-1788572697

NO COMMENTS

Exit mobile version