Home முக்கியச் செய்திகள் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஞ்சுகள் நச்சுப் புகையால் பலி

அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஞ்சுகள் நச்சுப் புகையால் பலி

0

கனகராசா சரவணன், வ.சக்தி   

மட்டக்களப்பு, திருகோணமலை வீதியில் அமைந்துள்ள ‘கோ-ஆப் இன்’ விடுதியில் புதன்கிழமை (27) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அறையினுள் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் நச்சுப் புகையைச் சுவாசித்தமையினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பதுளை, பசறை வீதி, நியூ வில்லேஜ் (நியூ ஜனபடா) பகுதியைச் சேர்ந்த சந்தனி நிமாஷா (05 வயது) என்ற சிறுமியும், கசுன் மதுசங்க (03 வயது) என்ற சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

பொலிஸ் விசாரணைகளின்படி, இச்சிறுவர்களின் தாயார் மட்டக்களப்பு, காட்டங்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய்க்கான தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். சிகிச்சை பெற்று வரும் தாயாரைப் பார்ப்பதற்காகவே, இச்சிறுவர்கள் இருவரும் தங்களது தந்தையான படிஞ்சா ஹென்னாயக்க முதியனசெலகே சஞ்சீவ ரஞ்சித் குமார என்பவருடன் மட்டக்களப்பிற்கு கடந்த 23ஆம் திகதி வந்துள்ளனர்.

மட்டக்களப்பு நகருக்கு வந்த அவர்கள், திருகோணமலை வீதியில் உள்ள ‘கோ-ஆப் இன்’ ரெஸ்டாரன்ட்டின் அறையில் தங்கியிருந்துள்ளனர்.

புதன்கிழமை (27) பிற்பகல் 2.00 மணியளவில், பிள்ளைகளின் தந்தை மது அருந்துவதற்காக இரு குழந்தைகளையும் அவர்கள் தங்கியிருந்த அறையினுள் வைத்து, கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணியளவில் விடுதியின் உணவருந்தும் அறையில் திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. கீழ் தளத்தில் ஏற்பட்ட இந்தத் தீயினால் வெளியான அடர்ந்த நச்சுப் புகை, மேல் தளத்தில் பிள்ளைகள் பூட்டப்பட்டிருந்த அறைக்குள்ளும் வேகமாகப் பரவியுள்ளது.

மது அருந்திவிட்டு தந்தை மீண்டும் அறைக்குத் திரும்பியபோது, அறை முழுவதும் தீப்பிடித்துப் புகை மண்டலமாகக் காட்சியளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அறைக்கதவைத் திறந்து பார்த்தபோது, இரு குழந்தைகளும் நச்சுப் புகையைச் சுவாசித்ததால் அறையினுள்ளேயே மயங்கிக் கிடந்துள்ளனர்.

மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு குழந்தைகளையும் தந்தை உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் (அடிப்படை மருத்துவமனை) அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதியின் உணவருந்தும் அறையில் ஏற்பட்ட தீப்பரவல், அங்குள்ள ஊழியர்களினால் உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டுள்ளது. எனினும், துரதிஷ்டவசமாக அறைக்குள் பூட்டப்பட்டிருந்த இரு பிஞ்சுயிர்களும் நச்சுப் புகையினால் மூச்சுத்திணறிப் பலியாகியுள்ளன.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்த இரு சிறுவர்களின் சடலங்களும் தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையின் சவக்காலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைகள் வியாழக்கிழமை (28) அன்று நடத்தப்பட்டன.

இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்ற நிகழ்வுப் புலனாய்வுக் குழுவினர் (SOCO) இணைந்து தடயவியல் விபரங்களுடன் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

 

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/73-377732

NO COMMENTS

Exit mobile version