இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரும் கலாபூசணம், பரதசூடாமணி பட்டம் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று திங்கட்கிழமை (20) நடைபெற்ற நிலையில், அவரது மாணவ, மாணவிகள் கண்ணீருடன் நிகழ்த்திய நாட்டியாஞ்சலி பலரின் மனதையும் உருக்கியுள்ளது.
மட்டக்களப்பில் பரதகலாலயா என்ற நாட்டியப் பள்ளியை நடத்திவந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான சுபித்ரா கிருபாகரன், இலங்கை மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பரதகலாலயா கிளைகளை நிறுவி, ஏராளமான நாட்டியக் கலைஞர்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கியவர் எனப் போற்றப்படுகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரதநாட்டியக் கலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) சுகவீனம் காரணமாக காலமானார்.
அவரது இறுதிக்கிரியைகள் நேற்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றன. அப்போது, அவரது மாணவ, மாணவிகள் கண்ணீருடன் நிகழ்த்திய இறுதி மரியாதையான நாட்டிய சமர்ப்பணம் அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், அதன் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் உள்ளிட்ட அரசியல், கலை மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
