இந்த ஆண்டு 2.5 இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக இந்த வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வோரின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பான நாடுகளில் அதிக ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு 143,087 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 92,590 பேர் ஆண் தொழிலாளர்களாகவும், 50,497 பேர் பெண் தொழிலாளர்களாகவும் இருந்துள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்புவதற்கு பணியகம் திட்டமிட்டுள்ள நிலையில், இதுவரை 7,873 பேர் அந்நாட்டில் வேலைவாய்ப்புகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மேலும், தென் கொரியாவுக்கு 8,000 தொழிலாளர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவர்களில் 4,794 பேர் ஏற்கனவே அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 73,623 தொழிலாளர்கள் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்காகவும், 69,494 தொழிலாளர்கள் திறன் சாராத வேலைவாய்ப்புகளுக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Source: https://samugammedia.com/this-year-the-agency-plans-foreign-jobs-for-250000-sri-lankans-1785131159
