இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பல பகுதிகளில் விவசாயப் பயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க் கொள்ளளவு தற்போது 37 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களே தற்போதைய வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ரீதியாக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 23 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 4 நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 26 சதவீதமாகவும், திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் 28 சதவீதமாகவும் காணப்படுகிறது.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 42 சதவீதமாகவும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் 10 நீர்த்தேக்கங்களின் சராசரி நீர்மட்டம் 43 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
நீர்மட்டம் குறைந்துள்ளதால் குடிநீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்களும் அழிவடைந்துள்ளன.
இதற்கிடையில், லக்கல களு கங்கை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீர்த்தேக்க நிர்மாணத்தின்போது நீரில் மூழ்கிய பல்லேகம நகரின் சில பகுதிகள் மீண்டும் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளதால், எதிர்வரும் சிறுபோகச் செய்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் சில பகுதிகளில் விலங்குகள் உயிரிழந்து கிடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை நண்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் வரை காணப்படும் என வானிலை அவதானிப்பகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நீர் நெருக்கடியை கருத்திற்கொண்டு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
