இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்க அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானத்தை இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (EASL) வரவேற்றுள்ளது.
இந்தத் தீர்மானம், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவில் இலங்கைப் பொருட்களின் போட்டித்தன்மையைப் பாதுகாக்க உதவும் என சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக முன்மொழியப்பட்டிருந்த அதிகளவிலான வரிகளுடன் ஒப்பிடுகையில், தற்போதைய 10% வரி விகிதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்றும், இதன் மூலம் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அதிகளவான உறுதிப்பாடு கிடைக்கும் என்றும் EASL குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. அவர்களின் முயற்சிகள் ஏற்றுமதியாளர்களையும், இத்துறையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க உதவியுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 10% வரி விகிதமானது பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் கம்போடியா உள்ளிட்ட முக்கிய போட்டி நாடுகளுடன் சமநிலையை ஏற்படுத்துவதாக EASL தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஆடைத் தொழில்துறைக்கு இந்த வரி சமநிலை மிகவும் முக்கியமானது எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆடைத் துறையில் இலாப வரம்புகள் குறைவாக இருப்பதுடன், சர்வதேச கொள்வனவாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து பொருட்களைப் பெறுவதற்கான செலவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரியில் வெறும் 2.5 சதவீதப் புள்ளிகள் வித்தியாசம் ஏற்பட்டாலும், அது சர்வதேச சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மையை கணிசமாக பாதிக்கக்கூடும் என EASL குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்காவுடனான விரிவான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதன் மூலம் அதிகளவான உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதுடன், சந்தை அணுகலை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச வர்த்தகக் கொள்கைகள் எவ்வளவு விரைவாக மாற்றமடையக்கூடும் என்பதை அண்மைய முன்னேற்றங்கள் எடுத்துக்காட்டுவதாகவும், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு நிலையானதும் கணிக்கக்கூடியதுமான வர்த்தகச் சூழலை உருவாக்குவது மிகவும் அவசியமானது என்றும் EASL வலியுறுத்தியுள்ளது.
