Home இலங்கை ஒலுவில் துறைமுகம் அறிவியல் ஆய்வின்றி திட்டமிட்டதே தற்போதைய நெருக்கடிக்கு காரணம்

ஒலுவில் துறைமுகம் அறிவியல் ஆய்வின்றி திட்டமிட்டதே தற்போதைய நெருக்கடிக்கு காரணம்

0
image

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டின் கடல் மற்றும் நீரியல் வளங்களை நிலைபேன்தகு முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின்போது, துறைமுகங்களின் தற்போதைய நிலை, மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சுருக்கு வலைப் பயன்பாட்டுக்கான அனுமதிப்பத்திர விதிமுறைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகம் நீண்டகாலமாக மணல் படிவத்தால் பாதிக்கப்பட்டு, தற்போது பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவக் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் அலைகளின் வேகம், காற்றின் வேகம், கடல் நீரோட்டங்களின் தன்மை மற்றும் மணல் நகர்வு உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் போதுமான அறிவியல் மற்றும் முறையான சாத்தியக்கூறு  குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதமையே துறைமுகத்தின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

சுமார் நான்கு தசாப்தங்களாக துறைமுக நிர்மாணம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், போதிய அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்படாததன் காரணமாக துறைமுகத்தின் நுழைவாயிலில் பாரியளவில் மணல் படிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி ஆய்வுகள், கிடைக்கப்பெற்ற அறிவியல் தரவுகள் மற்றும் மீனவ சமூகத்தினரின் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து உரிய முறையில் திட்டமிடப்படாததன் விளைவாக, தற்போது வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் துறைமுகத்திற்குள் நுழைவதிலும் வெளியேறுவதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலையில், துறைமுகப் பகுதியில் தேங்கியுள்ள மணலை அகற்றி அதனைப் பெறுவதில் அவை அதிகளவில் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். 

Source: https://samugammedia.com/oluvil-harbour-planning-without-scientific-study-is-the-cause-of-the-current-crisis-1788951014

NO COMMENTS

Exit mobile version