மன்னார் நகரப் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையில் பல்வேறு பாரிய சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட சோதனையின் போது, உணவகத்தின் சுகாதாரமற்ற நிலைமை வெளிச்சத்துக்கு வந்தது.
பரிசோதனையில், ஈக்கள் மொய்க்கும் அசுத்தமான சூழலில் உணவு தயாரிக்கப்பட்டது, மிகவும் சுகாதாரமற்ற சூழலில் சமையல் இடம்பெற்றது ஆகியவை கண்டறியப்பட்டன. கூடுதலாக, கெட்டுப்போன காய்கறிகள் உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதும், கோழிக் கழிவுகளால் மாசடைந்த முட்டைகள் சேர்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், சமைத்த மற்றும் சமைக்காத உணவுகள் சரியாக பிரிக்கப்படாமல் ஒரே அசுத்தமான குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப்பட்டிருந்தது. சூடான உணவுகளை பரிமாறுவதற்கும் தயாரிப்பதற்கும் அபாயகரமான பிளாஸ்டிக் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இன்றி உணவு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததும், குப்பைத் தொட்டிகள் மூடியின்றி அசுத்தமாக வைத்திருந்ததும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த அனைத்து குறைபாடுகளும் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை உடனடியாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த உணவகத்திற்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
