தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது தீர்மானமோ இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்யாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இன்றும் நாளையும் அவர்கள் அதே இடத்தில் தங்கியிருக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மீனவர் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஒன்பது நாட்கள் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் பின்னர், ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக அச் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
மேலும், அந்த வாக்குறுதிக்கமைய நாரா (NARA) நிறுவனம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதிக்குள் கடலடி மற்றும் கடற்கரை சார்ந்த களப் பரிசோதனைகளை முடித்திருந்த போதிலும், ஐந்து மாதங்கள் கடந்தும் இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் எதிர்வரும் புதன்கிழமைக்குள் திருப்திகரமான தீர்வு கிடைக்காவிட்டால், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் 2,000-க்கும் அதிகமான மீனவர்களை இந்தப் போராட்டத்திற்கு அழைக்கப்போவதாகவும் அகில இலங்கை மீனவர் சங்கம் எச்சரித்துள்ளது.
