Home இலங்கை எமது பூர்வீக நிலத்தை தா! 12 ஆவது வாரமாகவும் வீதிக்கிறங்கி போராடும் பலாலி மக்கள்

எமது பூர்வீக நிலத்தை தா! 12 ஆவது வாரமாகவும் வீதிக்கிறங்கி போராடும் பலாலி மக்கள்

0
image

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு கோரி காணி உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று 12ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் நீண்டகாலமாக இராணுவப் பயன்பாட்டில் இருந்து வரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவித்து, தங்களை மீள்குடியேற்ற வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்து, தமது பூர்வீக நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தமது சொந்தக் காணிகளில் நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பல வருடங்களாக தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள மக்கள், காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காக வாரந்தோறும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கி காணிகளை விரைவாக விடுவித்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Source: https://samugammedia.com/give-us-our-ancestral-land-the-people-of-balali-have-been-protesting-on-the-streets-for-the-12th-week-1788691673

NO COMMENTS

Exit mobile version