Home இலங்கை எரிபொருள் மாபியாக்களுக்கு அடிபணிந்து சூரிய சக்தியை அழித்து வருகின்றது அரசு! சஜித் குற்றச்சாட்டு

எரிபொருள் மாபியாக்களுக்கு அடிபணிந்து சூரிய சக்தியை அழித்து வருகின்றது அரசு! சஜித் குற்றச்சாட்டு

0
image

எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் கமிஷன்களுக்குத் தற்போதைய அரசு அடிபணிந்துள்ளது என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டின் நிலையான ஆற்றல் மற்றும் சூரிய சக்தியை முற்றிலுமாகக் குழிதோண்டிப் புதைக்கும் கொள்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.

சூரிய சக்தி துறையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, துறைசார் பங்குதாரர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்க்கட்சியாக இருந்தவேளை 100 சதவீத புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி பற்றிப் பேசியவர்கள், ஆட்சியமைத்ததும் அதைப் புறந்தள்ளிவிட்டு எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் பிடியில் வீழ்ந்துள்ளனர்.

அண்மையில், வலுச்சக்தி அமைச்சின் செயலாளர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடிவொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், ‘நெட்-மீட்டரிங்’ மற்றும் ‘நெட்-அக்கவுண்டிங்’ ஆகியவற்றை நீக்கிவிட்டு ‘நெட்-ப்ளஸ்’ முறையைச் செயற்படுத்துமாறு சட்டவிரோதமானதொரு ஆலோசனையை வழங்கியுள்ளார். அத்தகைய ஆலோசனையை வழங்க அமைச்சின் செயலாளருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

தோராயமாக 2,500 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் 25 பில்லியன் ரூபா பொருளாதாரத்தை உருவாக்கும் தொழில்துறையானது, அரசின் இத்தகைய தவறான கொள்கைகளால் நாசப்படுத்தப்பட்டு வருகின்றது.

சூரிய சக்திக்கான தேசிய இலக்கில், 1 மில்லியன் (10 இலட்சம்) கூரைகள் என்ற இலக்கை அடைய வேண்டியிருந்தும், தற்போது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 8 இலட்சத்து 50 ஆயிரம் கூரைகள் எஞ்சியுள்ளன.

அரசு சூரியசக்தியை அழித்துவிட்டு டீசல் மின்சாரத்துக்கே ஆதரவளித்து வருகின்றது. ‘யுகதனவி’, ‘சோபாதனவி’ மற்றும் ‘சஹஸ்ததனவி’ என்பன வெறும் வெற்று வார்த்தைகளே தவிர, ஒரு எல்.என்.ஜி. யூனிட் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

சூரிய சக்தியை மேம்படுத்தும் உபகரணங்களுக்கு வரிச் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், சிறிய அளவிலான சோலார் வியாபாரங்களை மேற்கொண்ட படித்த இளைஞர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இது மூளைசாலிகளின் வெளியேற்றத்துக்கு வழிவகுக்கும்.

தேசத்துரோக வலுச்சக்தி மாபியாக்களை இல்லாதொழித்து, சூரிய சக்தியானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக முழுமையாக அமையும் வகையில் 100 வீத இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். இந்தத் திட்டங்களில் இணைந்த தொழில்முனைவோரை அநாதரவாக்கக் கூடாது.” – என்றார்.

Source: https://samugammedia.com/the-government-is-destroying-solar-power-by-bowing-to-the-fuel-mafia–sajiths-allegation-1790653483

NO COMMENTS

Exit mobile version