திருகோணமலை, மூதூர் கிழக்கு பகுதியில் கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் பிரதான வீதியோரத்தில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் சுகாதார ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்வதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூதூர் கிழக்கு ஒருங்கிணைந்த கிராம மட்ட அமைப்புக்கள், இது தொடர்பில் மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.
கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகிலுள்ள குறித்த பகுதியில் கழிவுகள் வீதியோரத்தில் சிதறிக் காணப்படுவதுடன், அப்பகுதியிலிருந்து துர்நாற்றமும் வீசுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வீதியோரத்தில் கொட்டப்படும் கழிவுகளை கால்நடைகள் மற்றும் நாய்கள் உட்கொள்வதுடன், அவை வீதியில் அலைந்து திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்துக்கள் இடம்பெறக்கூடிய அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொருத்தமற்ற குறித்த இடத்தில் கழிவுகளை கொட்டுவதை உடனடியாக நிறுத்தி, திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கு பொருத்தமான மாற்று இடமொன்றை ஏற்பாடு செய்யுமாறும் கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்த்து, வீதியில் எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
