Home இலங்கை கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்திக்கு சிறப்பு முகப் பரிசோதனை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்திக்கு சிறப்பு முகப் பரிசோதனை!

0
image

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, CCTV காட்சிகளில் பதிவாகியுள்ள நபர்களுடன் ஒப்பிடுவதற்கான சிறப்பு முகப் பரிசோதனைக்கு உட்படுத்த அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுமார் ஒன்பது மாதங்களாக கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சமர்ப்பித்த விடயங்களைப் பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபரிடம், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றையும் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட விதம், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய சந்தேகநபர்களுடனான தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான மேலதிக அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் திட்டமிடப்பட்ட காலப்பகுதி, பணம் பரிமாறப்பட்ட விதம் மற்றும் ஏனைய சந்தேகநபர்களால் ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விதம் தொடர்பான தகவல்களையும் பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்த கொழும்பு குற்றப் பிரிவு, சந்தேகநபரின் முகத்தை CCTV காட்சிகளில் பதிவாகியுள்ள நபர்களுடன் ஒப்பிடும் நோக்கில் சிறப்பு முகப் பரிசோதனை மேற்கொள்ள அவரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கோரியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி சந்தேகநபரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/kanmulla-sanjeev-murder-special-facial-examination-signal-for-tuesday-1786508395

NO COMMENTS

Exit mobile version