Home இலங்கை மடு திருத்தலத்தில் குவியும் பக்தர்கள்: பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து விசேட கலந்துரையாடல்

மடு திருத்தலத்தில் குவியும் பக்தர்கள்: பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து விசேட கலந்துரையாடல்

0
image

 

மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று மடு திருத்தலத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரச அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம்முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இலட்சக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளதுடன், திருவிழா தினங்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவ வசதிகள், தங்குமிடங்கள், குடிநீர், மின்சாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், திருவிழா காலப்பகுதியில் திட்டமிட்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பிச்சையெடுப்போர் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தருவதால், மடு திருத்தலப் பகுதியில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான விசேட சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், திருவிழா காலத்தில் பொருட்களை நியாயமான விலையில், உரிய நிறையுடன் விற்பனை செய்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் அவற்றைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மடு பகுதியில் நடமாடும் நீதிமன்றம் நிறுவப்படவுள்ளதுடன், சட்டத்தை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவோருக்கு எதிராக அதன் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மடு அன்னையின் ஆவணித் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், தொடர்ந்து மாலை நவநாள் திருப்பலி நடைபெற்று வருகிறது.எதிர்வரும் 14ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும், 15ஆம் திகதி காலை திருவிழா திருப்பலியும் ஆயர்கள் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/devotees-gather-at-the-madurai-temple-special-discussion-on-security-and-hygiene-1786508611

NO COMMENTS

Exit mobile version