திருகோணமலை கன்னியா பகுதியில் இன்று நடப்பது நாளை மயிலிட்டில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதே மக்களின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் போக்குகாட்டிக் கொண்டு இருக்க கூடாது எனவும் வலியிறுத்தியுள்ளார்.
வலி வடக்கு, மயிலிட்டியில் காணிகளை விடுவிப்பிற்காக மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் போராட்டத்தில் இன்று(24.07.2026) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
‘பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தக் காணிகள் நிரந்தரமா தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விடுமோ என்ற இந்த மக்களின் அச்சத்தினை நியாயப்படுத்தும் வகையிலேயே சம்பவங்கள் நடைபெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் இந்து ஆலயம் ஒன்று பன்னெடுங்காலமாக அமைந்திருந்த காணி யுத்த காலத்தில் படைத் தரப்பினரின் கட்டுபாட்டில் இருந்து வந்துள்ளது.
அந்தக் காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு தலத்தின் சிதைவுகளை சான்றுப் பொருட்களாக காண்பித்து பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தொல்லியல் சின்னங்கள் அங்கு இருப்பதாகவும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் துறைசார் அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான நடவடிக்கை, தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையாளர்களை மகிழச்சிப்படுத்து நிகழ்ச்சி நிரலில் முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் மக்களுக்கு போக்கு காட்டுகின்ற நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றது. மக்களினால் முன்னேடுக்கப்படுகின்ற போராட்டங்கள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் செலுத்தாமல், மக்களை திசைதிருப்பும் நோக்கோடு வீதி திறப்பு விழாக்களை விமர்சையாக ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றனர்.
ஒரு சில கிலோமீற்றர் மாத்திரம் புனரமைக்கப்பட்ட வீதியை திறப்பதற்கு பல நூறு கிலோமீற்றர் தூரம் பயணித்து அமைச்சர்கள் வருகின்றார்கள். இது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே நோக்கப்பட வேண்டியது.
அண்மைய தேர்தல்களில் ஒருவிதமான எதிர்பார்ப்போடு மக்கள் தவறானவர்களை தெரிவு செய்து விட்டார்கள் என்பதற்காக எமது மக்களை இலகுவில் ஏமாற்றி விடலாம் என்றோ, சிந்தித்து தீர்மானம் செய்யும் திறன் அற்றவர்களாகவோ எமது மக்களை தற்போதைய அரசாங்கம் எடை போட்டு விடக்கூடாது.
எமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும். அவர்களுடைய சொந்தக் காணிகளை அவர்களிடமே கையளிக்க வேண்டும்.’ என்று தெரிவித்தார்
