Home இலங்கை 22ஆவது திருத்தம் நிச்சயம் நிறைவேற்றப்பட்டே தீரும்! ஜனாதிபதி அநுர திட்டவட்ட அறிவிப்பு

22ஆவது திருத்தம் நிச்சயம் நிறைவேற்றப்பட்டே தீரும்! ஜனாதிபதி அநுர திட்டவட்ட அறிவிப்பு

0
image

உத்தேச 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என்றும், அது கட்டாயம் நிறைவேற்றப்பட்டே தீரும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் அறிவித்துள்ளார்.

களுத்துறை – புளத்சிங்கள பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என்று ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மேற்படி கூட்டத்தில் உறுதிபடக் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

“நாங்கள் சட்டத் திருத்தங்களை உருவாக்கியுள்ளோம். அதற்காகத் தேவையான அரசமைப்புத் திருத்தங்களையும் செய்துள்ளோம். நாங்கள் பயமின்றி முன்னோக்கிச் செல்வோம். அப்போது என்ன நடக்கும்? கறுப்புச் சட்டங்களின் பாதுகாப்பில் இருந்தவர்கள் அச்சமடைவார்கள். தூதரகங்களை நோக்கி ஓடுவார்கள். உலக அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்கள்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் இந்தத் தீர்மானங்களை மக்களுக்காகவே எடுக்கின்றோம். எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் திரும்பப் பெறமாட்டோம்.

22ஆவது திருத்தம் குறித்த தீர்ப்பு விரைவில் கிடைக்கும். பத்திரிகைகளில் 18ஆம் திகதி போன்ற ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். தீர்ப்பு கிடைத்ததும் அதனை விரைவில் நிறைவேற்றுவோம்.

இந்த ஊழல்வாதிகளுக்கு நாங்கள் தண்டனை வழங்க வேண்டும்.” – என்றார்.

Source: https://samugammedia.com/the-22nd-amendment-will-certainly-be-passed-president-anuras-categorical-announcement-1788758746

NO COMMENTS

Exit mobile version