Home இலங்கை காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாபிலவில் 45வது நாளாக தொடரும் போராட்டம்! வலுக்கும் ஆதரவு

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாபிலவில் 45வது நாளாக தொடரும் போராட்டம்! வலுக்கும் ஆதரவு

0
image

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06.08.2026) இரண்டாம் கட்டத்தின் 45வது நாளை எட்டியுள்ளது.

கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளை முதற்கட்டமாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது சொந்த காணிகளில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக மீள ஒப்படைக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

போராட்டம் 45 நாட்களை கடந்துள்ள போதிலும் இதுவரை அதிகாரிகள் தரப்பிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மக்கள், தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

“இன்று இரண்டாம் கட்ட போராட்டத்தின் 45வது நாளாகும். இதுவரை எவ்வித சாதகமான முடிவுகளும் கிடைக்கவில்லை. எமது பூர்வீக காணிகள் கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை.

கடும் வெப்பத்திலும் போராடி வருகின்றோம். எதிர்காலத்தில் மழை ஏற்பட்டாலும் எமது போராட்டத்தை தொடர்வோம் என்ற உறுதியுடன் இருக்கின்றோம்.

ஆளுநர், அரசாங்க அதிபர் அல்லது பிரதேச செயலாளர் எமது நிலைமையை நேரில் பார்வையிட்டு இதுவரை எந்தவொரு மாற்று நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த வாரம் பிரதிச் செயலாளர் ஒருவர் வருகை தந்து காணி விடுவிப்பு தொடர்பில் குழுவொன்றை அமைத்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துச் சென்றுள்ளார். அதனடிப்படையில் சாதகமான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்” என தெரிவித்தனர்.

மேலும், தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் நாளை (07.08.2026) மன்னார் மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மக்களின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும், மன்னார் மாவட்டம் மட்டுமன்றி ஏனைய மாவட்ட மக்களும் தமது காணி மீட்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிவில் அமைப்புகள் தமது காணி மீட்பு போராட்டத்திற்கு வலுசேர்த்து, பூர்வீக காணிகளை மீளப் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/the-protest-demanding-the-release-of-the-prisoners-at-kapapil-continues-for-the-45th-day-support-is-growing-1786010521

NO COMMENTS

Exit mobile version