மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ பேருந்து சேவையின் கீழ் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை இம்மாதத்திற்குள் 122 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேருந்து சேவையை முன்னெடுப்பதற்கு எதிர்காலத்தில் தனியார் துறையினருக்கும் வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தற்போது மெட்ரோ பேருந்து சேவையின் முதலாம் இலக்க வழித்தடத்தில் மாகும்புர முதல் மகரகம ஊடாக கடவத்தை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் மேலும் 15 புதிய மெட்ரோ பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுப் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றும் இலங்கை போக்குவரத்து சபையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இறக்குமதி செய்யவும், இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Source: https://samugammedia.com/minister-announces-metro-bus-service-for-kalli-kandy-and-jaffna-1788841737
