மாத்தறை, கம்புருபிட்டிய – ஹொரபாவிட்ட பகுதியைச் சேர்ந்த சிறைச்சாலை ஜெயிலர் எம்.ஜி. உபாலி (42) உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான உபாலியும் உயிரிழந்துள்ளார்.
கடற்படையில் 12 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சிறைச்சாலைத் துறையில் இணைந்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெயிலராகப் பணியாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்த ஜெயிலரின் சடலம், தேசிய மருத்துவமனையில் இடம்பெறும் சட்டபூர்வ மரண விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு மற்றும் ஒன்பது வயதுடைய இரு மகன்களின் தந்தையான உபாலி, கிராமத்திற்கும் நாட்டிற்கும் பல்வேறு சமூக சேவைகளை ஆற்றியவர் என அவரது தாயார் ரணவக ஆரச்சிகே வினிதா சமன்லி உள்ளிட்ட உறவினர்களும் அயலவர்களும் தெரிவித்துள்ளனர்.
“அவரது இழப்பு முழு ஹொரபாவிட்ட கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், அவரது சடலத்தை இல்லத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் உறவினர்களும் கிராம மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய, ஹொரபாவிட்ட பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லம் மற்றும் சுற்றுப்புறங்கள் வெள்ளைக் கொடிகள் மற்றும் பந்தல்களால் அலங்கரிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் சோகமயமான சூழல் நிலவுகின்றது.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்த திலகசிறிகே நிலக்ஷ ருவன் திலகசிறி என்பவரின் உடலம் நேற்றைய தினம் மாலை அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
42 வயதான இந்த அதிகாரி, அனுராதபுரம் மாவட்டத்தின் ரம்பேவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பகஹவெவ, பிஹிம்பியகொள்ளேவ என்ற முகவரியைச் சேர்ந்தவராவார்.
குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான இந்த அதிகாரிக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
முன்னதாக கடற்படையில் இணைந்து 12 வருடங்கள் சேவையாற்றி அதிலிருந்து விலகிய இவர், பின்னர் சிறைச்சாலை திணைக்களத்தில் சிறைச்சாலை காவலராக (Prison Guard) பணியில் இணைந்து கொண்டார்.
வெலிகடை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் சுமார் 5 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
இந்நிலையிலேயே, அவசர சேவைத் தேவை நிமித்தம் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த வேளையில், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு அவர் முகங்கொடுத்துள்ளார்.
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரியின் உடலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அனுராதபுரம் சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
