திருகோணமலை மாவட்டம், மூதூர் பகுதியில் அமைந்துள்ள முக்கிய போக்குவரத்துப் பாதையான பஸார் பள்ளி வீதியை அதிநவீன முறையில் புனரமைக்கும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. கிராமிய அபிவிருத்தி மற்றும் வீதிப் பணிகளுக்கான பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்து கொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
சுமார் 350 மீற்றர் நீளமுடைய மூதூர் பஸார் பள்ளி வீதியானது, கிராமிய அபிவிருத்தி நிதியத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முழுமையாகக் காபட் வீதியாக மாற்றப்படவுள்ளது. அத்துடன் மழைநீர் தேங்காதவாறு வீதியின் இருமருங்கிலும் முறையான வடிகான் அமைப்புகளும் இதன்கீழ் உருவாக்கப்படவுள்ளன.
இவ்வரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச அமைப்பாளர் கே.எம்.சப்றான், உள்ளூர் பிரதேச சபை உறுப்பினர் றிபான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் பொறியியலாளர்கள், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அப்பகுதிப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இப்புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில், அப்பகுதி மக்களின் நீண்டநாளைய போக்குவரத்து அசௌகரியங்கள் தீர்வதோடு வர்த்தக நடவடிக்கைகளும் மேன்மையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
