Home இலங்கை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து ரம்யா லங்காவின் சமூகப் பணிகள் முன்னெடுப்பு!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து ரம்யா லங்காவின் சமூகப் பணிகள் முன்னெடுப்பு!

0
image

திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்து சமூக நலன்புரி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக ரம்யா லங்கா (அழகான தேசம்) தொண்டு நிறுவனத்தின் மாவட்ட தொண்டர்களுக்கான செயலமர்வு நேற்று (6) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.

ரம்யா லங்கா நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக நடைபெற்ற இச்செயலமர்வில், மனித நலன், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, நாம் இலங்கையர் என்ற உணர்வு, நல்லாட்சி மற்றும் விழுமிய ஊடகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களான சுத்தமான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குதல், சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் நாட்டின் பொதுவான நலனை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள், ரம்யா லங்கா நிறுவனத்தின் இலக்குகளுடனும் தொடர்புபட்டுள்ளன என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் தொடர்பாகவும், அதன் நோக்கங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும், திருகோணமலை மாவட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளருமான அஷ்ரப் இம்ரான் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

ரம்யா லங்கா நிறுவனத்தின் தலைவர் எம். எச். எம். உசைர் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், திருகோணமலை மாவட்ட சர்வோதய இணைப்பாளர், கிண்ணியா பிரதேச செயலாளர், திருகோணமலை வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ரம்யா லங்கா நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ஏ. கே. எம். தாரிக் ஒருங்கிணைப்பில் இச்செயலமர்வு நடைபெற்றது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் நோக்கங்களை மக்கள் மட்டத்தில் கொண்டு சென்று, சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் எதிர்காலத்தில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Source: https://samugammedia.com/ramya-lankas-social-initiatives-carried-out-in-collaboration-with-the-clean-sri-lanka-program-1788775951

NO COMMENTS

Exit mobile version