திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புல்மொட்டை நான்காம் கட்டைப் பகுதியில், தித்வா புயலினால் வீடுகள் பாதிக்கப்பட்ட ஜின்னா நகர் மற்றும் கமாஸ் நகர் கிராமங்களைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கான புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (17) நடைபெற்றது.
ஒவ்வொரு வீடும் தலா 50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதனுடன், சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கமாஸ் நகரைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளி ஒருவருக்காக 10 இலட்சம் ரூபா செலவில் புதிய வீடொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்கான காசோலைகளும் உரிய பயனாளிகளிடம் வழங்கி வைக்கப்பட்டன.
குச்சவெளி பிரதேச செயலாளர் யூ. எல். சியாஉல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய வீடுகளுக்கான அடிக்கற்களை நாட்டி வைத்தார்.
மேலும், பயனாளிகளுக்கான நிர்மாண நிதிக் காசோலைகளையும் அவர் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
