Home இலங்கை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபான ஆலை! – 6 பேர் கைது

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபான ஆலை! – 6 பேர் கைது

0
image

கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த இடமொன்றில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, ஆறு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

ஆரம்ப விசாரணைகளில், குடிநீர் வணிகம் நடைபெறுவதாக வெளியில் காட்டப்பட்டிருந்த நிலையத்தில், மறைமுகமாக சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெற்று வந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது, 180 மில்லிலிட்டர் கொள்ளளவு கொண்ட 18,575 சட்டவிரோத மதுபானப் போத்தல்கள் (மொத்தம் 3,345.5 லீட்டர்), ஒரு லீட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு போத்தல்கள், 750 மில்லிலிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு போத்தல், மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட எத்தனோல் மற்றும் உற்பத்தி உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 50 கிராம் மற்றும் 200 மில்லிகிராம் அளவிலான கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 30, 43, 58, 59 மற்றும் 62 வயதுடைய ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மிஹிந்தலை, மருதானை, வத்தளை, வேபொட தெற்கு, கெத்தலாவ மற்றும் சிப்பிகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விற்பனை என்ற போர்வையில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டவிரோத மதுபானங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வர்த்தக ரீதியிலான மோசடியுடன் தொடர்புடைய மேலும் பல தகவல்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/illegal-alcohol-factory-under-the-name-of-drinking-water-purification-plant–6-arrested-1782804270

NO COMMENTS

Exit mobile version