Home முக்கியச் செய்திகள் கொழும்பில் ஆளைக் கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளை: பொலிஸ் அதிகாரி கைது

கொழும்பில் ஆளைக் கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளை: பொலிஸ் அதிகாரி கைது

0

கனகராஜா சரவணன்

கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான குறித்த பொலிஸ் அதிகாரி, களனியில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கடந்த 21-ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் திகதி, கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் இவர் கடமையாற்றியபோது, நபர் ஒருவரைத் கடத்தி 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த அதிகாரி மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அங்கு கடமையாற்றி வந்த இவர், அண்மையில் களனியில் உள்ள பொலிஸ் பயிற்சி நெறிக்காகச் சென்றிருந்தார். இதன்போது, குறித்த கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், பயிற்சியில் இருந்த குறித்த பொலிஸ் அதிகாரியை கடந்த புதன்கிழமை (20) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கடந்த 21-ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மேலும், குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/150-377543

NO COMMENTS

Exit mobile version