Home இலங்கை கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு விவகாரம்: விசாரணை கோரி சி.ஐ.டி.யில் முறைப்பாடு

கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு விவகாரம்: விசாரணை கோரி சி.ஐ.டி.யில் முறைப்பாடு

0
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய பதிவை வெளியிட்டு, அவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் சிவில் சமூக செயற்பாட்டாளர் சான் கணேகொடவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல ஆகியோர் இணைந்து நேற்று இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலும், இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் அல்லது அமைப்புகள் செயற்படுகின்றனவா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹர்ஷன ருக்ஷான், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்து அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் குரல் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் சான் கணேகொடவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

மக்களின் ஆணையினால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட எந்தவொரு ஜனாதிபதிக்கும் எதிராகவும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக கட்சி வேறுபாடின்றி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், குறித்த நபரின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் அல்லது தொண்டு நிறுவனங்கள் செயற்படுகின்றனவா என்பதையும், நாட்டையோ அரசாங்கத்தையோ நிலைகுலையச் செய்யும் சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், குறித்த நபருக்கு எதிராக நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் இருப்பதாக முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, குறித்த நபரின் தொலைபேசி உரையாடல் தரவுகள், வங்கிக் கணக்குகள், வருமான மூலங்கள் மற்றும் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/gotabayas-phone-call-leakage-case-complaint-filed-with-cid-seeking-investigation-1785472851

NO COMMENTS

Exit mobile version