இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. தைரியமிருந்தால் இக்குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்திற்கு வெளியே வந்து பகிரங்கமாகக் கூறுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு சவால் விடுத்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இவ்வாறு செயற்படுவதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரால் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இத்தகையக் கூற்றுக்கள் மிகவும் வேடிக்கையானவை. நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைக்கான எதிர்ப்பானது இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல.
களுத்துறை, கொழும்பு உள்ளிட்ட பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சட்டச் சமூகமும் ஒன்றிணைந்தே இதற்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
அத்துடன், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு நீதிபதிகள் சங்கமும் உத்தியோகபூர்வமாக எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடவே எதிர்ப்பை வெளியிடுகிறார் என்றால், நீதிபதிகள் சங்கத்தில் உள்ள எந்த நீதிபதி பதவி விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறார்?
பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு பொய்களைப் பரப்பாமல், இக்குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்திற்கு வெளியே பகிரங்கமாகக் கூறுமாறு சவால் விடுக்கின்றேன் என்றார்.
